“இத்தாலி, ஸ்பெயின் நம்பிக்கையளிக்கிறது” – அமெரிக்கா
கொரோனா வைரஸால் உலகிலேயே மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளான இத்தாலி மற்றும் ஸ்பெயினில் கடந்த சில நாட்களாக அந்த நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது, அமெரிக்காவின் “எதிர்காலம் என்னவாக இருக்கும்” என்பதில் “நம்பிக்கையைத் தருகிறது” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் கொரோனா வைரஸ் தொடர்பான ஆலோசகர்களில் ஒருவரான டெபோரா பிர்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் மையமாக விளங்கும் நியூயார்க் நகரத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த நோய்த்தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
“பல வாரங்களுக்கு முன்னர் நியூயார்க் உள்ளிட்ட அமெரிக்க நகரங்களில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் வரும் வாரத்தில் கட்டுக்குள் வரும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று டெபோரா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள உலக நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் இதுவரை 337,274 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 9,619 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஸ்பெயினில் தொடர்ந்து குறையும் உயிரிழப்புகள்
ஸ்பெயினில் தொடர்ந்து நான்காவது நாளாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
ஸ்பெயினில் இன்று (திங்கட்கிழமை) கோவிட்-19 நோய்த்தொற்றின் காரணமாக 637 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது நேற்று 674ஆக இருந்தது. இதன் மூலம் மார்ச் 24 முதலான கடந்த இரண்டு வார காலத்தில் ஸ்பெயினில் பதிவாகும் குறைந்தபட்ச உயிரிழப்பாக இது உள்ளது.
இருப்பினும், இன்று (திங்கட்கிழமை) ஸ்பெயினில் மேலும் 4,273 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸால் உலகிலேயே இரண்டாவது அதிகபட்ச உயிரிழப்புகளை கண்டுள்ள ஸ்பெயினில் அந்த நோய்த்தொற்றின் தாக்கம் உச்சநிலையை அடைந்துவிட்டதாக அந்த நாட்டு அதிகாரிகள் நம்புகின்றனர்.