“உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், 24 மணி நேரமும் பணிபுரிந்து நாள்தோறும் 400 சவப்பெட்டிகள் தயாரிக்கிறோம்” என, ஓ.ஜி.எஃப் நிறுவன இயக்குநர் வேதனையுடன் தெரிவித்தார்.
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளை விழிபிதுங்க வைத்துள்ளது. இதனால், சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த சவப்பெட்டி செய்யும் தொழிற்சாலைகள் இரவு பகல் பார்க்காமல் இயங்கி வருகின்றன.
அவைகள், இதுவரை இல்லாத அளவில் நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 410 சவப்பெட்டிகள் வரை தயாரித்து வருகின்றன.
இது குறித்து, கிழக்கு பிரான்சில் இயங்கி வரும் ஐரோப்பாவில் மிகப்பெரிய சவப்பெட்டி தயாரிப்பு நிறுவனமான ஓ.ஜி.எஃப் இயக்குநர் இம்மானுவேல் காரீட் கூறியதாவது;
“வழக்கமாக நாங்கள், 15 வகைகளில் சவப்பெட்டிகள் தயாரிப்போம். தற்போது, கொரோனா காரணமாக ஏற்பட்டு வரும் உயிரிழப்பு எண்ணிக்கை மற்றும் தேவை அதிகரிப்பு காரணமாக 4 வகைகளில் மட்டுமே தயாரிக்கின்றோம்.
நாள்தோறும் 400க்கும் அதிகமான சவப்பெட்டிகள் தேவைப்படுவதால், இங்கு பணிபுரியும் ஊழியர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணிபுரிந்து வருகின்றனர்.
சிலர், விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் பணிபுரிந்து, சவப்பெட்டி தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். இந்த சூழல், மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது” என, கவலையுடன் தெரிவித்தார்.