ஏப்ரல் 3–ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், இங்கிலாந்திலும் வேல்சிலும் இறந்தவர்கள் எண்ணிக்கை திடீரென உயர்ந்துள்ளது.
இந்த அதிகரிப்புக்கு கொரோனா மரணங்கள் ஓரளவு காரணமாக இருந்தாலும், அது தவிரவும் மரணங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. குறிப்பிட்ட வாரத்தில் இங்கிலாந்து மற்றும் வேல்சில் இறந்தவர்கள் எண்ணிக்கை, 16,387. தேசிய புள்ளிவிவர அலுவலகம் இந்த வாராந்திர புள்ளிவிவரங்களை வெளியிடத் தொடங்கிய 2005ம் ஆண்டுக்குப் பிறகு இவ்வளவு மரணங்கள் நிகழ்ந்ததில்லை. இந்த மரணங்களில் கொரோனா தொடர்பானவை 3,475 மட்டுமே.
ஓர் ஆண்டின் இந்தக் காலப்பகுதியில் நிகழும் மரணங்களின் சராசரி எண்ணிக்கையைக் காட்டிலும் இது 6,000 அதிகம். ஃப்ளு காய்ச்சல் ஏற்படும் பருவத்துக்குப் பிறகு வழக்கமாக மரணங்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கும்.
இந்த கூடுதல் மரணங்களில் 60 சதவீதம் மட்டுமே கொரோனா வைரசால் நிகழும் நிலையில்ல மீதமுள்ள 40 சதவீதத்துக்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
கொரோனா வைரஸ் மரணங்களில் சில கண்டுபிடிக்கப்படாமலே நிகழலாம், அல்லது தொற்று, பொதுமுடக்கம் தொடர்பான பிற காரணிகளால் இந்த மரணங்கள் நிகழலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக மக்கள் பிற நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளாததாலோ, வன்முறை தொடர்பான மரணங்களாலோ மரணங்கள் அதிகரித்திருக்கலாம்