யாழ்ப்பாணம், பலாலி  தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில்  தனிமைப்படுத்தப்பட்டிருந்தோரில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனைகளில் நேற்று உறுதியாகியுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் சத்தியமூர்த்தி  தெரிவித்தார்.

இதனூடாக இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்று இரவு 10.00 மணியாகும் போது 237 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.

பலாலி இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள  தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் , அரியாலை பகுதியில் மத போதகர் ஒருவரின் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள், அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தோர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், நேற்று முன் தினம்  8 பேருக்கும் நேற்றைய தினம் 2 பேருக்கும்  கொரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டதாக  யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் சத்தியமூர்த்தி குறிப்பிட்டார்.

இந் நிலையிலேயே நாடளாவிய ரீதியில் நேற்று முன்திம் 15 பேரும் நேற்று 4 பேரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டதாகவும் அதன் பிரகாரம் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 237 ஆக அதிகரித்ததாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.

இந் நிலையில் அடையாளம் காணப்பட்ட 237 தொற்றாளர்களில் இதுவரை இலங்கையில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 63 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

அதன்படி மேலும் 167 பேர் தொடர்ந்தும் அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை வெலிகந்த முல்லேரியா ஆதார வைத்தியசாலைகள் சிலாபம் – இரணவில் வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.  மேலும் நாடளாவிய ரீதியில் 24 வைத்தியசாலைகளில் 144 பேர் கொரோனா சந்தேகத்தில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் தரவுகள் பிரகாரம், இதுவரை அதிக தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 47 ஆகும். இதற்கு அடுத்தபடியாக கம்பஹாவில் 27 பேரும் களுத்துறையில் 45 பேரும் புத்தளத்தில் 35 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இதனை விட வடமாகாணத்தில் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளோர் 17 ஆக அதிகரித்துள்ளது.

இந் நிலையில்  நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு  ஊரடங்கு நிலைமையை நீக்கி தொழிற்சாலைகள், விவசாயம் மற்றும் வியாபார நடவடிக்கைகளை வழமைபோன்று முன்னெடுப்பதற்கான சிபாரிசுகளை விரைவில் வழங்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, மாகாண சுகாதார பணிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று  நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

மாகாண மட்டத்தில் கிடைக்கும் சிபாரிசுகளை கருத்திற்கொண்டு தற்போது விதிக்கப்பட்டுள்ள வரையறைகளை தளர்த்துவது தொடர்பில் தீர்மானம் எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி இதன்போது  மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் தெரிவித்துள்ளார்.

மாகாண மட்டத்தில் தகவல்களை திரட்டுவதற்காக ஜனாதிபதி ஏற்பாடு செய்திருந்த இந்த சந்திப்பில் சுகாதார அமைச்சர் மற்றும் மாகாண சுகாதார அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

உள்நாட்டு பொருளாதாரத்தை பாதுகாக்கும் வகையில் நாளாந்த பொருளாதார செயற்பாடுகளை விரைவில் ஆரம்பிப்பதற்கான இயலுமை தொடர்பில் ஆராய்வதற்காக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply