இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்தது. பலி எண்ணிக்கை 480 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,378 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 991 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 43 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 480 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1992 பேர் குணமடைந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் அதிக அளவாக 3323 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 201 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் டெல்லியில் 1707 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 42 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 1323 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு 15 ஆக உள்ளது.

Share.
Leave A Reply