கொரோனா வைரஸ்  தொற்றுக்  காரணமாக இன்றிரவு (19) 8.00 மணியுடன் நிறைவடைந்த 12 மணி நேரத்தில் 15 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில்  இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 269 ஆக அதிகரித்துள்ளது.

இன்று  அடையாளம் காணப்பட்ட 15 புதிய தொற்றாளர்களும் கொழும்பு , கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வாழைத்தோட்டம் எல்லையில் உள்ள பண்டாரநாயக்க மாவத்தையில் கண்டறியப்பட்டுள்ள நிலையில் அப்பகுதி முழுவதும் முடக்கப்பட்டுள்ளது.

குறித்த 15 பேரும் பண்டாரநாயக்க மாவத்தை, 146 ஆம் தோட்டத்தில் முதன் முதலாக அடையாளம் காணப்பட்ட 59 வயது பெண்ணுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் என தெரிய வந்துள்ள நிலையில், இதுவரை  பண்டாரநாயக்க மாவத்தையில் மட்டும் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சின்  தொற்று நோய்த்  தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

அதன்படி கொழும்பு மாவட்டத்தில் மட்டும் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறான பின்னணியில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட 269 தொற்றாளர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இன்றும்  10 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறிய நிலையில்  குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது.  அதன்படி  தற்போதும், 166 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம், கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  146 ஆம் தோட்டத்தில் வசிக்கும் 59 வயதான பெண் ஒருவர் , இந்தியாவுக்கு யாத்திரை சென்றுவிட்டு திரும்பி 33 நாட்களின் பின்னர் கொரோனா தொற்றுக்கு உஉள்ளாகியமை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து அவரது மகன்மார் உள்ளிட்டோருக்கும் கொரோனா இருப்பது  பி.சி.ஆர். பரிசோதனைகளில் தெரியவந்தது.

இதனையடுத்து பண்டாரநாயக்க மாவத்தையின் 146 ஆம் தோட்டம்  வரையிலான பகுதி முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்ப்ட்டது. இந்நிலையில் அங்கிருந்த பலரும் வெலிசறை வைத்தியசாலை உட்பட சில தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பட்டனர்.

ஏனையோர்,  முடக்கப்பட்ட பண்டாரநாயக்க மாவத்தை பகுதியிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர்.  இந்நிலையில் முடக்கப்பட்ட பகுதியில்   தனிமைப்படுத்தப்பட்டோரிடம் பி.சி.ஆர். பரிசோதனைக்கான சளி மாதிரிகள் நேற்று   பெறப்பட்ட நிலையில், அதன் பெறுபேறுகள் இன்று  மாலை கிடைத்தது. அதன்படி  அவர்களில்  15 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து  அவர்களது தொடர்பாடல் வட்டத்தை ஆராய்ந்த  பாதுகாப்புத் தரப்பினர், அந்த வட்டத்தை  முழு பண்டாரநாயக்க மாவத்தையிலும் விரிவுபடுத்தியுள்ள நிலையில் அப்பகுதியை முழுமையாக முடக்கினர்.

அத்துடன் அங்கிருந்தோர் பலரை தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு இராணுவம் கடற்படையினர், பொலிஸாரின் தலையீட்டுடன் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய பாதுகாப்புத் தரப்பினர் அழைத்துச் சென்றனர்.

Share.
Leave A Reply