கொரோனா பரவலை தடுக்க கொண்டுவந்த 144 தடை உத்தரவு ஏப்ரல் 20ம் தேதி தளர்த்தப்படும் என்றும் குறிப்பிட்ட ஆலைகள் இயங்கலாம் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், தமிழ்நாடு அரசின் ஆணைகள் வெளியிடும் வரை தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு ஆலை தொழிலாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பால் முடக்கப்பட்ட பகுதிகளில் மட்டும்தான் மே 3ம் தேதி வரை 144 தடை உத்தரவு முழுமையாக கடைப்பிடிக்கப்படும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டது.

ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு கட்டுப்பாடுகளை தளர்த்தி எந்தெந்த நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கலாம் என முடிவு செய்ய தமிழக அரசு ஒரு வல்லுநர் குழுவை உருவாக்கியுள்ளது.

அந்த குழு நாளை (ஏப்ரல் 20) ஆலோசனைகளை முதல்வரிடம் முன் வைக்கவுள்ளது. இந்த ஆலோசனைகளை கருதில் கொண்டு, முதல்வர் புதிய அறிவிப்புகளை முடிவுசெய்வார் என தமிழக அரசின் செய்திக்குறிப்பு கூறுகிறது.

புதிய அறிவிப்பு மீண்டும் வெளியிடப்படும் என்பது குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்றாலும், பாதுகாப்பு கருதி இந்த அறிவிப்பு வந்துள்ளது என்பதால் ஏற்றுக்கொள்ளலாம் என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.

”பல ஆலைகளில் முன் தயாரிப்பு பணிகளுக்கு நேரம் தேவை என்பதால் ஆலைகள் உடனே செயல்படாது. கட்டிட தொழிலாளர்கள் வேலை செய்ய, மூலப்பொருட்கள் பல ஊர்களில் இருந்து வந்துசேர வேண்டும் என்பதால் உடனே வேலைகளை தொடங்க முடியாது.

இதனால் வல்லுநர் குழுவின் மூலம் முடிவு எடுக்கப்படும் என்பது சரிதான். அதேநேரம், சமூக நல குழுக்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்களை உள்ளடக்கி யோசனைகளை கேட்டால், கொரோனாவை முழுமையாக வெல்ல நல்ல முடிவுகளை எடுக்கலாம்,” என்று அவர் கூறுகிறார்.

இந்தியாவில் 15 ஆயிரத்தை கடந்த நோய்த்தொற்று பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,712ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் இதுவரை மொத்தம் 507 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1068 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டதாகவும், 27 உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கோவிட்-19 நோய்த்தொற்று வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2,203ஆக அதிகரித்துள்ளது.

Share.
Leave A Reply