சீனாவின் வுஹான் நகர புறநகர் பகுதியில், அமைதியான சூழலில் அமைந்துள்ள, வைரஸ் தொடர்பாக ஆய்வு செய்யும் ஓர் ஆய்வுகூடம் தற்போது உலகின் கவனத்தைக் கவர்ந்துள்ளது

இன்று அனைத்து நாடுகளையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கரோனா நோய்த்தொற்று, அந்த ஆய்வகத்திலிருந்துதான் கசிந்திருக்கும் என்று அமெரிக்கா எழுப்பியுள்ள சந்தேகமே இதற்குக் காரணம்.

வுஹான் நகரில் முதல் முதலாக கடந்த டிசம்பர மாதம் பரவத் தொடங்கிய கொரோனா நோய்த்தொற்று, வனப் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட ஏதோ ஒரு விலங்கின் உடலில் இருந்ததாகவும் அந்த நகரிலுள்ள இறைச்சி சந்தையிலிருந்துதான் அது உலகம் முழுவதும் பரவியதாகவும் இதுவரை நம்பப்பட்டு வந்தது.

இருந்தாலும், அந்த தீநுண்மியை சீனா செயற்கையாக உருவாக்கியதாக அப்போதே வதந்திகள் எழுந்தன.

உயிரி ஆயுதமாக சீனா உருவாக்கிய அந்த தீநுண்மியை அந்த நாட்டுக்கே வினையாக முடிந்ததாகவும் சமூக ஊடகங்களில் ஊகத் தகவல்கள் பரவின.

இருந்தாலும், கொரோனா நோய்த்தொற்று செயற்கையாக உருவாக்கப்பட்டது இல்லை என்று அதனை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் உறுதியாகக் கூறினார.

2002-ஆம் ஆண்டு பரவிய ‘சார்;ஸ் நோய்த்தொற்றைப் போலவே, புதிய வகை கொரோனா நோய்த்தொற்றும் வெளவ்வாலில் தோன்றியதாகவும் இடையில் அந்த தீநுண்மி பாம்பின் உடலில் புகுந்து உரு மாறியதாகவும் முதலில் கூறப்பட்டது.

பின்னர் வெளவ்வால் உடலில் இருந்து அருகி வரும் ஓர் எறும்புத் தின்னி இனத்தின் உடலில் புகுந்து புதிய வடிவம் பெற்ற அந்தத் தீநுண்மி, பிறகு மனிதர்களின் உடலில் வளர்வதற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொண்டதாக விஞ்ஞானிகள் முடிவுக்கு வந்தனர்.

ஆனால், கொரோனா நோய்த்தொற்றின் தோற்றுவாயான வுஹான் நகரில், வைரஸ் தொடர்பாக ஆய்வு செய்யும் ஆய்வகமொன்று அமைந்துள்ள தகவல் வெளியானதும், அந்த நோய்த்தொற்று எப்படி பரவத் தொடங்கியது என்பது குறித்த சமூக ஊடங்களில் புதுப் புதுக் கதைகள் முளைக்கத் தொடங்கின.

இந்தச் சூழலில், வுஹான் தீநுண்மியியல் ஆய்வகம் குறித்து பார்ப்போம்.

அந்த ஆய்வகத்தின் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, ஆய்வுக்காக வைரஸ் மாதிரிகளை சேமித்துவைக்கும் ஆசியாவின் மிகப் பெரிய வைரஸ் வங்கி இந்த ஆய்வக வளாகத்தில் அமைந்துள்ளது. அங்கு 1,500-க்கும் மேற்பட்ட நுண்கிருமிகள் உயிருடன் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

அந்த ஆய்வகத்தில், மனிதர்களுக்கிடையே பரவி நோயை ஏற்படுத்தக் கூடிய, மிகவும் ஆபத்தான – எபோலா போன்ற – 4-ஆம் பிரிவு தீநுண்மிகளை சேமித்து வைப்பதற்கான ஆய்வகமும் உள்ளது. இதுதான், 4-ஆம் பிரிவு தீநுண்மிகளைக் கையாளும் ஆசியாவின் முதல் ஆய்வகமாகும்.

பிரான்ஸைச் சேர்ந்த உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் அலாயின் மெரீயக்ஸின் ஆலோசனையின் பேரில் உருவாக்கப்பட்ட அந்த உயர் பாதுகாப்பு ஆய்வகம், 2015-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டு, தனது செயல்பாட்டை 2018-ஆம் ஆண்டில் தொடங்கியது.

அந்த ஆய்வகத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகளால்தான், கொரோனா நோய்த்தொற்று தற்செயலாக வெளியேறி, வூஹான் மக்களிடையே பரவியதாக தற்போது சந்தேகிக்கப்படுகிறது.

இதுகுறித்து அமெரிக்க இராஜங்க செயலாளர் (வெளியுறவு அமைச்சர்)   மைக்கேல் பொம்பேயோ கூறுகையில், கரோனா நோய்த்தொற்று பரவலுக்கு வூஹான் தீநுண்மியியல் ஆய்வகம் காரணமாக இருக்கலாம் என்று சீன அதிகாரிகளே கருதியதாகவும் அதுதொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் தாங்களும் விசாரணை நடத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக அவா் தெரிவித்தார்.

வுஹான் ஆய்வகத்திலிருந்து தற்செயலாக கரோனா நோய்த்தொற்று வெளியேறி, அது மனிதர்களிடையே பரவியிருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என அமெரிக்க அதிகாரிகள் பலர் கருதுவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை வுஹான் ஆய்வகம் மறுத்துள்ளது. இதுகுறித்து அந்த ஆய்வக நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு டிசம்பர் 30 ஆம் திகதி அடையளம் தெரியாத ஒரு தீநுண்மியின் மாதிரி தங்களுக்கு அனுப்பப்பட்டதாகவும் அதன் மரபுக் கூறு மாறுதல் போக்கு குறித்து ஆய்வு செய்து, அந்த விவரத்தை உலக சுகாதார அமைப்பிடம் தாங்கள் கடந்த ஜனவரி மாதம் 2-ஆம் திகதி சமர்ப்பித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்று பரவல் விவகாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் மக்களை திசைத்திருப்பி பொறுப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கும் அமெரிக்க அரசு இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவதாக சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஷாவ் லிஜியான் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தச் சூழலில், கொரோனா நோய்தொற்று எங்கிருந்து பரவத் தொடங்கியது என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.

பெரும்பாலான விஞ்ஞானிகள் அந்த தீநுண்மி வெளவ்வாலில் இருந்து எறும்புத் தின்னி மூலம் மனிதர்களுக்குப் பரவியதாக ஒப்புக் கொள்கின்றனர்.

ஆனால், இன்னும் சில விஞ்ஞானிகளோ, வுஹான் ஆய்வகத்திலிருந்து தற்செயலாக கசிந்த அந்த தீநுண்மி, மனிதர்களிடையே பரவியிருப்பதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகமிருப்பதாகக் கூறுகின்றனர்.

கொரோனா நோய்த்தொற்று இருப்பது முதல் முதலாக உறுதி செய்யப்பட்ட 41 பேரில், 13 பேருக்கு வுஹான் இறைச்சி சந்தையுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இருந்தாலும், இப்போதைய நிலையில் கொரோனா நோய்த்தொற்று இறைச்சி சந்தைக்கு வந்த வனவிலங்கு மூலம் மனிதர்களுக்குப் பரவியதா, அல்லது தீநுண்மியியல் ஆய்வகத்தின் பாதுகாப்பு குறைபாடுகளால் வெளியே கசிந்து பரவியதா என்பது குறித்து உறுதியாக எதுவும் கூற முடியாது என்பதே பெரும்பாலான விஞ்ஞானிகளின் நிலைப்பாடாக உள்ளது.

இந்த விவகாரத்தில் தெளிவான முடிவுக்கு வர வேண்டுமென்றால், இதுதொடர்பாக இன்னும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிறார்கள் அவர்கள்

அதுவரை, கரோனா நோய்த்தொற்று எங்கிருந்து, எவ்வாறு பரவியது என்பது அறுதியிட்டு விடை கூற முடியாத கேள்வியாகவே தொடரும்.

Share.
Leave A Reply