தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள  ஊரடங்குச் சட்டம் நாளை மறுதினம் (20) ஆம் திகதி திங்கட்கிழமை முதல் பல பிரதேசங்களில் காலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை  தளர்த்தப்படவுள்ளது.

அன்றாட மக்கள் நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கும் வகையிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி,  நாளை மறுதினம்   அதிகாலை 5.00 மணிக்கு மொனராகலை, பொலன்னறுவை, அநுராதபுரம், திருகோணமலை, முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, ஹம்பாந்தோட்டை  நுவெரெலியா, மாத்தளை, குருணாகல், யாழ்ப்பாணம், வவுனியா, காலி, மாத்தறை,மட்டக்களப்பு, இரத்தினபுரி, பதுளை ஆகிய நிர்வாக மாவட்டங்களில்  ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளது.

அத்துடன் அதே  காலப் பகுதியில்  கண்டி, கேகாலை மற்றும்  அம்பாறை ஆகிய மாவட்டங்களில்  4 பொலிஸ் பிரிவுகள் தவிர்த்து ஏனைய பகுதிகளிலும்   ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.

குறித்த மூன்று மாவட்டங்களில்  அலவத்துகொடை,  அக்குறணை, வரகாப்பொல, அக்கரைப்பற்று ஆகிய பொலிஸ் பிரிவுகளில் மட்டும் ஊரடங்கு  மறு அறிவித்தல்வரை தொடரும் என  செயலகம் தெரிவித்தது.

பிராந்திய சுகாதார பணிப்பாளர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள முன்மொழிவுகளுக்கு அமைய, அரசாங்கம் இது குறித்து கூடிய அவதானம் செலுத்தி மாவட்ட ரீதியிலும் பொலிஸ் பிரிவுகளின் அடிப்படையிலும் ஊரடங்கு சட்டத்தை இலகுபடுத்தப்படும் விதமாக இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் திங்கட்கிழமை  ஊரடங்கு தளர்த்தப்படும் அனைத்துப் பகுதிகளிலும் மறு அறிவித்தல்வரை, நாளாந்தம் ஊரடங்கு சட்டமானது இரவு 8 மணி முதல் மறு நாள் அதிகாலை 5 மணி வரை அமுல்படுத்தப்படும்  என ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.

இது இவ்வாறிருக்க,  கொரோனா தொற்று பரவல் குறித்த அபாய வலயங்களாக அவதானிக்கப்படும் மாவட்டங்களான மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா, களுத்துறை  ஆகிய மாவட்டங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கானது  பல நிபந்தனைகளின் அடிப்படையில் எதிர்வரும் 22 ஆம் திகதி புதன் கிழமை தளர்த்தப்படவுள்ளது. இந்த நான்கு மாவட்டங்களிலும் உள்ள 21 பொலிஸ் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளுக்கே இவ்வாறு அந்த ஊரடங்கு நிலைமை தளர்த்தப்படும் என  ஜனாதிபதி செய்லகம் தெரிவித்தது.

கொழும்பு மாவட்டத்தில் உள்ள 11 பொலிஸ் பிரிவுகளில் மறு அறிவித்தல்வரை  ஊரடங்கு தொடரவுள்ளது.  அதன்படி, கொழும்பு மத்தி பொலிஸ் வலயத்துக்குள்வரும் வாழைத்தோட்டம் , மருதானை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு மறு அறிவித்தல்வரை தளர்த்தப்படமாட்டாது. எனினும் அந்த பொலிஸ் வலயத்தில் உள்ள புறக்கோட்டை, டாம் வீதி, ஆட்டுப்பட்டித் தெரு, கோட்டை, கொம்பனித் தெரு, மாளிகாவத்தை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் 22 ஆம் திகதி அதிகாலை 5.00 மனிக்கு ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளது.

அத்துடன் கொழும்பு வடக்கு பொலிஸ் வலயத்தில் கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ்  ஆகிய  பொலிஸ் பிரிவுகளில் மட்டும்  ஊரடங்கு  மறு அறிவித்தல்வரை தொடரவுள்ளது. அந்த பொலிஸ் வலயத்தின்  துறைமுகம், கரையோரம்,  முகத்துவாரம், மட்டக்குளி, புளூமென்டல், தெமட்டகொடை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் 22 ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளது.

அத்துடன் கொழும்பு தெற்கு பொலிஸ் வலயத்தில் பம்பலப்பிட்டி பொலிஸ் பகுதியில் மட்டும்  ஊரடங்கு மறு அறிவித்தல் வரை தொடர்வுள்ள நிலையில்,  கொள்ளுப்பிட்டி, கிருலப்பனை, வெள்ளவத்தை,  நாரஹேன்பிட்டி,  பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு  மண்டபம்,  பொரளை மற்றும்  கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுகளில்  ஊரடங்கு 22 ஆம் திகதி அதிகாலை 5.00 மணிக்கு தளர்த்தப்படும்.

மேலும், நுகேகொடை பொலிஸ் வலயத்தில்  கொத்தட்டுவ, முல்லேரியா, வெல்லம்பிட்டி,  ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் கல்கிஸை பொலிஸ் வலயத்தில் கல்கிஸை, தெஹிவளை மற்றும் கொஹூவலை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

இவ்விரு பொலிஸ் வலயங்களிலும்  ஏனைய பொலிஸ் பிரிவுகளில் ஏப்ரல் 22 ஆம் திகதி புதன்கிழமை காலை 5 மணிக்கு தளர்த்தப்படும். இந் நிலையில் அவ்வாறு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டமானது கொழும்பு மாவட்டம் முழுதும்   இரவு 8 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படவுள்ளது. அதன்படி ஏனைய பகுதிகளைப் போன்றே கொழும்பிலும் ஊரடங்கு தளர்த்தப்படும் பகுதிகளில் நாளாந்தம் இரவு 8.00 மணி முதல் மறுநாள்  அதிகாலை 5.00 மணி வரை ஊரடங்கு அமுல் செய்யப்படவுள்ளது.

இதேபோல், கம்பஹா மாவட்டத்தில் ஜா – எல, கொச்சிக்கடை, சீதுவை ஆகிய பொலிஸ் பிரிவுகள் தவிர ஏனைய பகுதிகளில் 22 ஆம் திகதி ஊரடங்கு சட்டமானது அதிகாலை 5.00 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது. களுத்தறை மாவட்டத்தின் பண்டாரகம, பேருவளை, பயாகல மற்றும் அளுத்கம ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும். அம்மாவட்டத்தின் ஏனைய பகுதிகள் 22 ஆம் திகதி அதிகாலை 5.00 மணி முதல் ஊரடங்கு தளர்த்தப்படும்.

புத்தளம் மாவட்டத்தில் புத்தளம், மாரவில மற்றும் வென்னப்புவ ஆகிய பொலிஸ் பிரிவுகளில் மட்டும் ஊரடங்கு மறு அறிவித்தல்வரை தொடர்வுள்ள நிலையில் அம்மாவட்டத்திலும் ஏனைய பொலிஸ் பகுதிகளில் 22 ஆம் திகதி அதிகாலை 5.00 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளது.

இவ்வாறு  ஊரடங்கு தளர்த்தப்படும் அனைத்து பகுதிகளிலும் நாளாந்தம் இரவு 8.00 மணி முதல் மறு நாள் அதிகாலை 5.00 மணிவரை தேவைக்கு ஏற்ப ஊரடங்கு அமுல் செய்யப்படவுள்ளது.

எனினும் ஊரடங்கு நிலைமையை தளர்த்தி, அன்றாட மக்கள் நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டுவரும் போதும் சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு   நிபந்தனைகளை அமுல் செய்யவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

 

Share.
Leave A Reply