மருத்துவ, சுகாதார வட்டாரங்களின் எதிர்ப்புக்களையும் ஆலோசனைகளையும் மீறி, அரசியல் கட்சிகளின் குற்றச்சாட்டுக்களையும் புறந்தள்ளி யாழ். மாவட்டத்தில் இன்று காலை 5.00 மணி முதல் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டிருக்கின்றது.
இன்று முதல் யாழ்ப்பாணம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் காலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணிவரையில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று காலை ஊரடங்கு தளர்த்தப்பட்ட போது யாழ்ப்பாணத்தில் பொதுமக்களின் நடமாட்டம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது.
சுவிஸ் போதகர் அரியாலையில் நடத்திய ஆராதனை மூலம் யாழ். மாவட்டத்துக்குள் கொரோனா தாக்கம் ஏற்பட்டது. இதன் மூலம் யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் படிப்படியாக இனங்காணப்பட்டு வந்தனர்.
இதனையடுத்து கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட அரியாலை, தாவடிப் பகுதிகள் முற்றாக முடக்கப்பட்டதுடன் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இவ்வாறு பலாலி தனைமைப்படுத்தல் மையத்தில் தனைமைப்படுத்தப்பட்டிருந்த 20 பேரில் 18 பேருக்கு தொற்று இருந்தமை கண்டறியப்பட்டு அவர்கள் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டிருந்தனர்.

தொற்றுக்கு இலக்காகக் கூடியவர்கள் இலகுவாக இனங்காணப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டிருந்தமையால் கொரோனா யாழ்ப்பாணத்தில் பரவுவது கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. ஆயினும் ஏற்கனவே இனங்காணப்பட்டுள்ள தொற்றாளர்களுடன் பழகிய பலர் வெளியில் உள்ளமையால் யாழ்ப்பாணத்தில் கொரோனா அபாய நிலை இன்னும் நீங்கிவிடவில்லை என மருத்துவ, சுகாதார் வட்டாரங்கள் எச்சரிக்கை விடுத்திருந்தன.
தொற்றுக்கான அபாயம் இன்னும் யாழ்ப்பாணத்தில் உள்ளமையால் நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டத்தை இப்போதைக்கு நீக்கவேண்டாம் என்ற கோரிக்கை பல மட்டங்களிலும் இருந்து வலுவாக எழுந்தது. ஆயினும் அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் யாழ்ப்பாணத்தில் இன்று முதல் தினமும் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்து.