கொரோனா வைரஸ், ஊரடங்கு நிவாரண நிதிக்கு பலரும் நன்கொடை வழங்கி வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்ற சட்டத்தரணிகள் இருவர், தலா, ஒரு ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக முதல்வர் நிவாரண நிதி, பிரதமர் நிவாரண நிதி என நன்கொடைகள் பெறப்பட்டு வருகின்றன.
பல அமைப்புகளும் தங்களால் இயன்ற அளவு, மக்களிடம் நன்கொடைகள் வசூலித்து, நிவாரண நிதிக்கு அளித்து வருகின்றன. அந்தவகையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பார் கவுன்சிலின் ஊரடங்கு நிவாரண நிதிக்கு பல சட்டத்தரணிகளும் நன்கொடை அளித்தனர். நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் ரூ.2.5 இலட்சம் நன்கொடை வழங்கி தொடங்கி வைத்தார். பலர் ரூ.5 இலட்சம் வரையில் வழங்கினர்.
இதுவரை 216 பேரிடம் இருந்து ரூ.60 இலட்சத்துக்கு மேல் நன்கொடைகள் திரட்டிய பார் கவுன்சில், நன்கொடை வழங்கியவர்களுக்கு வங்கி பரிமாற்ற விவரங்களும், பாராட்டு சான்றிதழும் அளிக்க முடிவு செய்துள்ளது.
அதில், இரு சட்டத்தரணிகள், வெறும் ஒரு ரூபாயை நன்கொடையாக வழங்கியது தெரியவந்துள்ளது. இன்னும் இரு சட்டத்தரணிகள் தலா ரூ.10ம், இருவர் தலா ரூ.500ம், நன்கொடையாக வழங்கினர்.
ஆனாலும், பார் கவுன்சில் சார்பாக ஒரு ரூபாய் நன்கொடை அளித்தவர்களுக்கும் பாராட்டு சான்றிதழை வழங்கியுள்ளது.