வேலூரில், மூன்றாவது திருமணம் செய்ய முயன்ற ரௌடியைக் கொடூரமாக வெட்டிக் கொன்ற நான்கு பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

வேலூர் கொசப்பேட்டை எஸ்.எஸ்.கே மானியம் பகுதியைச் சேர்ந்தவர் உதயா என்கிற உதயகுமார் (35). பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இந்த இளைஞருக்கு ஏற்கெனவே ஷோபா (35), ஆவாரம்பூ (30) என்று இரண்டு மனைவிகள் உள்ளனர்.

இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த புவனா என்கிற புவனேஸ்வரி (22) என்ற பெண்ணுடன் உதயகுமாருக்கு தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால், அந்தப் பெண்ணை மூன்றாவதாகத் திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்து புவனேஸ்வரியின் வீட்டுக்கே சென்று பெண் கேட்டுள்ளார்.

கைதானவர்கள்

“நீ ஒரு ரௌடி. ஏற்கெனவே ரெண்டு பெண்ணோட குடும்பம் நடத்துற. மூணாவதா எங்க வீட்டுப் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு, எவ்வளவு தைரியம் இருந்தா வீடேறி வந்து பொண்ணு கேட்ப…’’ என்று உதயகுமாரிடம் கோபத்தைக் காட்டியுள்ளார் பெண்ணின் அண்ணன் அப்பு என்கிற இமானுவேல்.

“யார் தடுத்தாலும் புவனேஸ்வரிக்குத் தாலி கட்டுவேன். அவள்தான் என்னுடைய மூணாவது பொண்டாட்டி’’ என்று உதயகுமாரும் பதிலுக்கு சவால்விட்டுள்ளார். இதனால், இரண்டு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, ஆத்திரத்திலிருந்த இளம்பெண்ணின் அண்ணனான இமானுவேல் தன் நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து உதயகுமாரை தீர்த்துக்கட்ட முடிவுசெய்ததாகக் கூறப்படுகிறது.

அதன்படி, சம்பவத்தன்று எஸ்.எஸ்.கே மானியம் பகுதியில் உதயகுமாரை சுற்றிவளைத்து அரிவாளால் கொடூரமாக வெட்டியுள்ளனர்.

கழுத்து, மார்புப் பகுதியில் பலத்த வெட்டு விழுந்ததில் உதயகுமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். அதையடுத்து, கொலையாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுதொடர்பாக, வேலூர் தெற்குக் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

இந்த நிலையில், தலைமறைவாக இருந்த இமானுவேல், அவரின் கூட்டாளிகள் நவீன்குமார், அந்திரியாஸ், நிர்மல் ஆகிய நான்கு பேரையும் காவல்துறையினர் கைதுசெய்தனர்.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகச் சொல்லப்படும் வெங்கடேசன், அல்வா என்கிற ஆரோக்கியமேரி ஆகிய இருவரும் தொடர்ந்து தலைமறைவாக உள்ளதாகக் கூறுகின்றனர் போலீஸார். கைதான நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் குடியாத்தம் சப் ஜெயிலில் அடைத்தனர்.

 

Share.
Leave A Reply