ஊரடங்கால் வருமானம் இன்றி தவித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்து ஊர் திரும்பியபோது 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
வெளிமாநிலங்களுக்கு சென்று வேலை செய்யும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர். ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி பலர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்றுவிட்டனர். வாகன போக்குவரத்து ரத்து செய்யப்பட்ட பின்னர், வேறு வழியில்லாமல் சொந்த வாகனங்கள் மூலமாகவும், கால்நடையாகவும் பல்வேறு இடர்பாடுகளை கடந்து சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.
அவ்வகையில், தெலுங்கானா மாநிலத்தில் இருந்து நடந்தே சத்தீஸ்கருக்கு வந்த 12 வயது சிறுமி, சொந்த ஊரை நெருங்கும்போது உடல்நலக்குறைவால் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியான ஜாம்லோ மக்தாம் மற்றும் சிலர் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மிளகாய் தோட்டத்தில் வேலை செய்தனர். ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், ஏப்ரல் 15ம் தேதி ஜாம்லோ மக்தாம் மற்றும் 11 தொழிலாளர்கள் கால்நடையாக சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.
3 நாட்களாக சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவைக் கடந்த அவர்கள், சனிக்கிழமை மாலை சொந்த ஊரை நெருங்கினர். ஊருக்கு வருவதற்கு 14 கிலோ மீட்டர் தூரம் இருந்த நிலையில், சிறுமி ஜாம்லோ மக்தாம் திடீரென கடுமையான வயிற்றுவலியால் துடித்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து இறந்துவிட்டார். அதன்பின்னர் அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.
பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. நீண்ட நேரம் நடந்ததால் ஏற்பட்ட களைப்பு, நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக சிறுமி உயிரிழந்திருப்பதாக டாக்டர் தெரிவித்தார். அவர் சரியாக சாப்பிடவில்லை என தொழிலாளர்கள் சிலர் கூறினர்.
உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு மாநில அரசு சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.