அமெரிக்காவில் நாடு முழுவதும் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிராக நூற்றுக்கணக்கானவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இந்த போராட்டக்காரர்கள் அமெரிக்காவின் மேற்கத்திய நகரமான டென்வரில் காரில் சென்று கொண்டிருந்தபோது இரு மருத்துவ பணியாளர்கள், இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இவர்களின் காரை மறித்து நின்றனர்.
வெள்ளை மாளிகை முன் போராடும் செவிலியர்கள்
அமெரிக்காவின் தேசிய செவிலியர்கள் ஒன்றிணைந்த சங்கத்தை சேர்ந்த செவிலியர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக் கோரி வெள்ளை மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முகக்கவசம் அணிந்தபடி செவிலியர் ஒருவர் அதிகாரிகளுக்கான கடிதம் ஒன்றை வாசிக்கிறார்:
”செவிலியர்கள், மருத்துவர்கள், மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு உடனடியாக பாதுகாப்பு உபகரணங்களை வழங்குமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
நீங்கள் எங்களை பாதுகாக்கவில்லை என்றால் எங்களால் எங்கள் நோயாளிகளை பாதுகாக்க முடியாது.” என்று குறிப்பிடுகிறார் அந்த செவிலியர்.
கொரோனா வைரஸால் உயிரிழந்த செவிலியர்களின் புகைப்படங்களை ஏந்தி அவர்கள் போராட்ட முழுக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
இந்தச் சங்கத்தில் சுமார் ஒன்றரை லட்சம் செவிலியர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அமெரிக்காவில் செவிலியர்களுக்கான மிகப்பெரிய சங்கமாக இது உள்ளது.
புகைப்படக் கலைஞர் அலிசன் மெக் க்லாரனால் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.