கொரோனா வைரஸ் காரணமாக லண்டனில் சிறுபான்மை இனத்தவர்கள் அளவுக்கதிகமாக பாதிக்கப்படுகின்றனர் என லண்டன் மேயர் சாதிக் கான் தெரிவித்துள்ளார்.
கார்டியனில் எழுதியுள்ள கட்டுரையொன்றில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் கொரோனா வைரசினால் மோசமாக பாதிக்கப்பட்டவர்களில் அனேகமானவர்கள் கறுப்பினத்தவர்கள்,ஆசிய சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதை புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் சனத்தொகையில் 14 வீதமாக காணப்படுகின்ற போதிலும் இந்த நிலை காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஏற்றத்தாழ்வு நிலை சிக்கலானது,மாறுபட்டது என அவர் எழுதியுள்ளார்.
எனினும் இந்த சமூகத்தினர் சுகாதார பணியாளர்களாகவும்,வணிகவளாகங்களிலும், பேருந்து சாரதிகளாகவும் பணியாற்றுவது இந்த நிலைக்கு காரணமாகயிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையில் 40 வீதமான மருத்துவர்களும், 20 வீதமான தாதிமார்களும் கறுப்பு ஆசிய சிறுபான்மை இனங்களை சேர்ந்தவர்கள் என லண்டன் மேயர் எழுதியுள்ளார்.
லண்டனில் முதியவர்களை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பவர்களில் 67 வீதமானவர்கள் இந்த சமூகத்தினர் எனவும் அவர் எழுதியுள்ளார்.
சமூகபொருளாதார காரணங்களால் பிரிட்டனின் ஆசிய மற்றும் சிறுபான்மை சமூகத்தினர் மத்தியில் கொரோனா வைரசினால் அதிக மரணங்கள் இடம்பெறுகின்றன என அவர் எழுதியுள்ளார்.
இனசிறுபான்மையினர் வறிய, நெரிசலான,தங்குமிடங்களில்,அல்லது ஒரே கூரையின் கீழ் பல தலைமுறைகளாக வாழ்கின்றனர் என கசப்பான உண்மை என அவர் எழுதியுள்ளார்.
அவர்கள் அதிகளவிற்கு வறுமையில் வாழக்கூடும்,ஆபத்தான தொழில்களை குறைந்த வருமானத்திற்காக செய்யக்கூடும் என லண்டன் மேயர் எழுதியுள்ளார்.
பலரிற்கு முடக்கல் நிலையின் போது வீடுகளில் பாதுகாப்பாக இருந்தவாறு பணியாற்றும் சூழலில் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இது எங்கள் நாடு விழித்தெழுவதற்கான அழைப்பாகயிருக்கவேண்டும் என தெரிவித்துள்ள சாதிக்கான் பாரிய சீர்திருத்தங்களிற்கு இது வழிவகுக்கவேண்டும் என அவர் எழுதியுள்ளார்.
இந்த நெருக்கடி முடிவிற்கு வந்ததும்,இன மற்றும் பொருளாதார சமத்துவத்தை உறுதி செய்யும்,நாட்டின் ஒவ்வொரு பிரஜையினதும்,நலனிற்கு முன்னுரிமை அளிக்கும் சமூக ஒப்பந்தத்தை ஏற்படுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.