உலகையே ஸ்தம்பிதமாக்கியுள்ள கொரோனாவால், அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2804 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகிலேயே ஒரு நாட்டில் நேற்று பதிவான அதிகபட்சமான உயிரிழப்பு இதுவாகும்.
உலகம் முழுவதும் 2,555,760 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதோடு, 177,449 பேர் இதுவரை உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7062 பேர் பலியாகியுள்ளமை பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், உலக வல்லரசாக கருதப்படும் அமெரிக்கா இதுவரை போரில் கூட இவ்வளவு உயிரிழப்புகளையும் பாதிப்பை சந்தித்து இருக்குமா என்பது சந்தேகம் தான்.
அமெரிக்காவில், இறந்த உடல்களை தினமும் அடக்கம் செய்வதற்கு கூட முடியாத அளவு உடல்கள் குவிந்து வருகின்றன.
அமெரிக்காவில், நேற்று(21.04.2020) 2804 பேர் இறந்ததால் அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45,318 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் நேற்று மட்டும் 25,985 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,18,744 ஆக அதிகரித்துள்ளது.
அத்தோடு, உலகின் மொத்த கொரோனா பாதிப்பில் 3 இல் ஒரு பங்கு அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு கடுமையாக சரிந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவை அடுத்த இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 828 பேரும், ஸ்பெயினில் 430 பேரும், இத்தாலியில் 534 பேரும், பிரான்ஸ் 531 பேரும், ஜெர்மனி 224 பேரும் நேற்று உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.