யாழ். வல்வெட்டித்துறையில் தொடர் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குழு ஒன்றின் உறுப்பினர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் திருடப்பட்ட பணம், நகை, கைத்தொலைபேசி மற்றும் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
வல்வெட்டித்துறை நெடியாகாடு பிரதேசத்தில் கடந்த தைப்பொங்கல் தினத்தில் நடைபெற்ற பட்டத் திருவிழாவின்போது சிறுவன் ஒருவன் புகைப்பிடிப்பதை ஒரு குழுவினர் வீடியோ எடுத்துள்ளனர்.
அதன் பின்னர் அந்த வீடியோவை குறித்த சிறுவனின் தாய், தந்தையரிடம் காட்டப் போவதாகக் கூறி அந்தச் சிறுவனை மிரட்டியுள்ளனர்.
இவ்வாறு மிரட்டி வந்த நிலையில், சில தினங்களின் பின்னர் குறித்த வீடியோவை மீண்டும் பெற்றோரிடம் காட்டப் போவதாகவும் இல்லாவிட்டால் வீட்டிலிருந்து நகை மற்றும் பணத்தை எடுத்து வருமாறு சிறுவனிடம் அந்தக் குழுவினர் அச்சுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து சிறுவனும் வீட்டிலிருந்த பணம் மற்றும் நகை என நாளாந்தம் கொண்டு வந்து இவர்களுக்கு கொடுத்துள்ளார்.
இதற்கு மேலாக வெளிநாட்டு நாணயத்தாள்களையும் கொண்டு வந்து கொடுத்துள்ளார். இவ்வாறாக தொடர்ந்து சிறுவனை மிரட்டி வந்த அந்தக் குழுவினர் வீட்டிலிருந்த ஏனைய பல பொருட்களையும் எடுத்துவருமாறு கூறி அதனையும் பெற்றுள்ளனர்.
இவ்வாறு சில மாதங்களாக குறித்த சிறுவனை மிரட்டி பணம் மற்றும் நகைகளை பெற்று வந்த குழுவினர், நாட்டில் கொரோனோ அச்சத்தால் ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கைத் தொடர்ந்து இரவு வேளையில் திருட்டிலும் ஈடுபட்டனர்.
இவ்வாறு அப்பகுதியில் வீடு ஒன்றின் கூரையைப் பிரித்து திருட்டில் ஈடுபட்டுள்ளது. அதேபோன்று இன்னொரு வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்துபொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த ஐவர் அடங்கிய குழு ஒன்றே இந்தச் சம்பவங்களுடன் தொடர்பு கொண்டுள்ளமை தெரிய வந்தது.
இதனையடுத் அவர்கள் ஐவரையும் கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன்போது சிறுவனை மிரட்டி பணம் நகை என்பன பறித்து வந்த விடயம் உள்ளிட்ட ஏனைய பல திருட்டுக்கள் தொடர்பிலும் தகவல்கள் வெளிவந்தன.
இந்தத் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிரந்து எட்டரை இலட்சம் ருபா பெறுமதியான திருடப்பட்ட நகைகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள், கைத்தொலைபேசிகள் எனப் பல பொருட்கள் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், சந்தேக நபர்கள் ஐவரையும் பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.