சென்னை: கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் ஈடுபடும் மருத்துவர்கள் உள்ளிட்ட அரசு பணியாளர்கள் எவரேனும் பணியில் இருக்கும்போது துரதிஷ்டவசமாக உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து இன்று நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
கொரோனா தடுப்பு பணியின்போது தொற்று ஏற்பட்டு மருத்துவர்கள் இறந்தால் 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும். மருத்துவத் துறை மட்டுமின்றி காவல் துறை, உள்ளாட்சி, தூய்மைப் பணியாளர்கள் உள்பட அனைத்து துறை பணியார்கள் இறந்தால் அவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும். உயிரிழக்கும் மருத்துவர்கள் உள்பட அனைத்து துறை பணியாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும்.
கொரோனா தடுப்பு பணியின்போது அரசு மற்றும் தனியார் பணியாளர்கள் இறந்தால், அவர்களின் பணியை பாராட்டி விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
உயிரிழக்கும் பணியாளர்களின் உடல்கள் உரிய மரியாதையுடன் பாதுகாப்பாக அடக்கம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Share.
Leave A Reply