கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்று காரணமாக இன்று இரவு 8.15  மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 47  புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது.

வெலிசறை கடற்படை முகாமில் 30 பேரும்,  கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்த 11 பேரும், மருதானையைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவரும்,  விடுமுறைகளில் சென்றிருந்த மேலும் 5 கடற்படையினரும் இவ்வாறு புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்த நிலையிலேயே இந்த எண்ணிக்கை இவ்வாரு அதிகரித்ததாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.

இந் நிலையில்  அதிக தொற்றாளர்கள் கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களில் பதிவாகியுள்ளதாகவும் நாடளாவிய ரீதியில், 17 சுகாதார மாவட்டங்களில் தொற்றாளர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.

இந் நிலையில் மொத்தமாக இதுவரை  இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள 415 பேரில்  7 தொற்றாளர்கள்  உயிரிழந்துள்ள நிலையில், நேற்றும் இருவர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறினர். அதன்படி இதுவரை 109 தொற்றாளர்கள் பூரண குணமடைந்துள்ளனர்.

இந் நிலையில், 399 தொற்றாளர்கள் தொடர்ந்தும் அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை, வெலிகந்த, முல்லேரியா ஆதார வைத்தியசாலைகள், காத்தாண்குடி ஆதார வைத்தியசாலை மற்றும் சிலாபம் – இரணவில் வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அத்துடன் கொரோனா சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 178 ஆக உயர்ந்துள்ளது.  அவர்கள்   நாடளாவிய ரீதியில் 31 வைத்தியசாலைகளில்  கொரோனா சந்தேகத்தில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் தொடர்ந்தும் அதிக தொற்றாளர்கள் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்புப் பிரிவின் தகவல்கள் தெரிவித்தன.

மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டோர் எண்ணிக்கை 233 ஆகும். இதில் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை 142 ஆகும்.  கொழும்பு மாவட்டத்தில்  கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பண்டாரநாயக்க மாவத்தையில் மட்டும் கண்டறியப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 81 வரை உயர்ந்துள்ளதாக கொழும்பு மத்தி சுகாதார வைத்திய அதிகாரி டப்ளியூ.கே. சந்தபால கூறினார்.

அங்கு அடையாளம் காணப்பட்ட தொற்றஆளர்களில் 6 மாத குழந்தை ஒன்றும்,  அப்பகுதி பல் பொருள் அங்காடி ஒன்றில் சேவையாற்றிய இருவரும் உள்ளடங்குவதாகவும் அவர் சுட்டிக்கடடினார்.

அதற்கு அடுத்தபடியாக  களுத்துறை மாவட்டத்தில் 58 பேரும்,  புத்தளத்தில் 35 பேரும் கம்பஹா மாவட்டத்தில்  33 பேரும்  இதுவரை தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் எண்ணிக்கை 16 ஆகும்.  கண்டியில் 7 பேரும், இரத்தினபுரியில் 6 பேரும், கேகாலையில் நல்வரும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனைவிட  குருணாகலில் 5 பேரும்  மாத்தறை மற்றும் கல்முனை, பதுளை ஆகிகிய சுகாதார மாவட்டங்களில்  தலா இருவர் வீதமும்,  காலி, மட்டக்களப்பு,  , வவுனியா, பொலன்னறுவை, மாத்தளை மாவட்டங்களில் தலா ஒவ்வொரு கொரோனா தொற்றாளர் வீதமும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில்  இன்று இரவு 8.15 மணி வரை அடையாளம் காணப்பட்ட 415 தொற்றாளர்களில், 3 வெளிநட்டவர்களும், வெளிநாட்டிலிருந்து வந்து நேரடியாக தனிமைபப்டுத்தல் முகாம்களுக்கு அனுப்பப்பட்ட 38 பேரும் உள்ளடங்குவதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் வெலிசறை கடற்படை முகாமுக்குள் கண்டறியப்பட்ட 58 தொற்றாளர்களும் உள்ளடங்குகின்றனர்.

Share.
Leave A Reply