இலங்கையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் படிப்படியாக குறைந்து வருவதாக தெரிவித்து, ஒரு மாத காலம் அமலில் இருந்த ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையிலேயே, கோவிட்-19 அச்சுறுத்தல் வலுப்பெற்றுள்ளது.
ஊரடங்கு தளர்த்தப்பட்ட நாள் முதல் கடந்த ஐந்து தினங்களில் மட்டும் 100க்கும் அதிகமான கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையத்தள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்த்தப்பட்ட கடந்த 20-ஆம் தேதியன்று வரை ஒரு நாளில் அடையாளம் காணப்பட்ட அதிகூடிய தொற்றாளர்களின் எண்ணிக்கை 17ஆக காணப்பட்ட நிலையில், நாடு வழமைக்கு திரும்பி வருகின்றது என்ற எதிர்பார்ப்பில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நாளில் மாத்திரம் 33 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
அதற்கு அடுத்த நாள் 6 தொற்றாளர்களும், 22ஆம் தேதி 20 தொற்றாளர்களும், 23ஆம் தேதி 38 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இலங்கையில் முதல் 100 கோவிட் தொற்றாளர்கள் 14 நாட்களில் அடையாளம் காணப்பட்ட நிலையில், கொரோனா தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்ட பின்னர் ஐந்து நாட்களிலேயே 100 தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது.
இலங்கையில் இதுவரை 373 கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், கடந்த ஐந்து நாட்களிலேயே அதிகளவிலான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 259 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், 107 பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.
கோவிட்-19 வைரஸ் தாக்கத்திற்குள்ளாகி 7 உயிரிழப்புக்கள் நாட்டில் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
183 பேர், இந்த தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அச்சுறுத்தலாக மாறியுள்ள பாதுகாப்பு பிரிவினர்
கொரோனா வைரஸ் தொற்றை இல்லாதொழிக்கும் செயற்பாட்டில் போலீஸார், ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியன சுகாதார பிரிவுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது.
கொரோனா ஒழிப்பு செயலணியின் தலைவராக ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவே நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், இலங்கையில் தனிமைப்படுத்தல் நிலையங்களை பெரும்பாலும் முப்படையினரே நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு மக்களை பாதுகாக்கும் பணிகளில் ஈடுபட்ட பாதுகாப்பு பிரிவினரே தற்போது கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக மாறிவிடுவார்களோ என்ற அச்ச நிலைமை தற்போது நாட்டு மக்கள் மத்தியில் ஏற்பட ஆரம்பித்துள்ளது.
அதற்கு பிரதான காரணம், வெலிசர கடற்படை முகாமில் கடமையாற்றிய கடற்படை சிப்பாய் ஒருவருக்கு நேற்று முன்தினம் கோவிட்-19 தொற்று ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில், வெலிசர கடற்படை முகாமிலுள்ள கடற்படை உறுப்பினர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட கோவிட்-19 பரிசோதனைகளின் ஊடாக 60 கடற்படையினருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, வெலிசர கடற்படை முகாம் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா வைரஸ் இல்லாதொழிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த கடற்படை சிப்பாய்களுடன் பழகியவர், அவர்கள் சென்ற இடங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் தற்போது சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.
மக்களை பாதுகாக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த படையினருக்கே கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளமை நாட்டு மக்கள் மத்தியில் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், குறித்த முகாமில் கடமையாற்றிய கடற்படை உறுப்பினர்களுடன் பழகியர்கள், குடும்பத்தினர் என பலரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது.
அச்சுறுத்தலாக மாறியுள்ள பகுதி
இலங்கையில் இந்த தொற்று பரவும் அச்சுறுத்தல் மிகுந்த பகுதியாக கொழும்பு மாவட்டம் பதிவாகியுள்ளது.
சுகாதார அமைச்சின் தரவுகளின் பிரகாரம், கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவிலான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் இதுவரை 130 கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதற்கு அடுத்தப்படியாக களுத்துறை மாவட்டத்தில் 58 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இலங்கை பிரதான பொருளாதார மத்திய பகுதியாக விளங்குகின்ற கொழும்பு தற்போது அச்சுறுத்தல் மிகுந்த பகுதியாக மாற்றமடைந்துள்ள நிலையில், மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து ஒரு மாதத்திற்கு முன்னர் வருகைத் தந்த பெண்ணொருவரினாலேயே கடந்த சில தினங்களாக கொழும்பில் அதிகளவிலான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.
கொழும்பு – பண்டாரநாயக்க மாவத்தை பகுதியில் வாழ்ந்த இந்த பெண்ணின் மூலம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிவேகமாக பரவ ஆரம்பித்த கோவிட் -19 தொற்று, தற்போது கொழும்பு நகரையே முடக்கியுள்ளது.
கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களை தவிர ஏனைய மாவட்டங்களுக்கான ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், இன்றிரவு முதல் மீண்டும் ஊரடங்கு நாடு தழுவிய ரீதியில் அமல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.