கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மே மாதம் 04ஆம் திகதி திங்கள் அதிகாலை 5.00 மணி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 27 திங்கள் அதிகாலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டு இரவு 8.00 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும். அதன் பின்னர் மே 01, வெள்ளிக் கிழமை வரை இம்மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் இரவு 8.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 5.00 மணி வரை மட்டுமே அமுலில் இருக்கும்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம மாவட்டங்களில் அரச, தனியார் துறை நிறுவனங்கள் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போதும் மே மாதம் 04ஆம் திகதி வரை திறந்து நடத்திச்செல்வதற்கு இயலுமான வகையில் குறித்த சட்ட திட்டங்கள் தளர்த்தப்படும்.

திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் போன்ற அரச நிறுவனங்களும் தனியார் துறையின் தொழிற்சாலைகள், கட்டிட நிர்மாணத்துறை, சேவை நிலையங்கள், மரக்கறி, மீன் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களை நடத்திச்செல்ல அனுமதியுள்ளது.

தனியார் துறை நிறுவனங்களை திறக்க வேண்டிய நேரம் காலை 10.00 மணியாகும். அரச, தனியார் துறைகளின் தலைவர்கள் மே மாதம் 04ஆம் திகதி முதல் தமது அலுவலகங்கள் மற்றும் சேவை நிலையங்களின் செயற்பாடுகள் எவ்வாறு மேற்கொள்ளப்படும் என்பது பற்றி அடுத்த வாரத்திற்குள் திட்டமிட வேண்டும்.

திணைக்ளங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் சேவைக்கு அழைக்கப்படவேண்டியவர்கள் முழு ஊழியர் எண்ணிக்கையில் 1/3வீதமானவர்கள் மட்டுமேயாகும். ஒரு நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் சேவை எவ்வளவு அவசியமானது என்ற போதும் அதற்குத் தேவையான குறைந்தளவான ஊழியர்களை மட்டுமே அழைப்பதற்கு நிறுவனத் தலைவர்கள் வகைசெய்ய வேண்டும்.

அனைத்து அரச நிறுவனங்களிலும் சேவைக்கு சமூகமளிக்காத அதிகாரிகள் வீடுகளில் இருந்து வேலைசெய்யுமாறு பணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிறுவனத்திலும் சேவைக்கு சமூகமளிக்க வேண்டிய ஊழியர்கள் யார், வீடுகளில் இருந்து வேலைசெய்ய வேண்டியவர்கள் யார் என்பதை நிறுவனத் தலைவர்கள் தீர்மானிக்க முடியும்.

ஒரு நாளையில், பணிக்குழாமில் சேவைக்கு அழைக்கப்படும் 1/3 பகுதியினருக்கு பதிலாக அடுத்த நாள் வேறு ஒரு பிரிவினரை தெரிவுசெய்வதற்கு நிறுவனத் தலைவர்களுக்கு முடியும்.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மக்கள் அனாவசியமாக வீதிகளுக்கு வருவது மற்றும் வேறு இடங்களில் ஒன்றுகூடுவதை நிறுத்த வேண்டும்.

போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள், புகையிரதங்களில் பயணிகள் போக்குவரத்து தொழிலுக்காக செல்வோருக்காக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியமாக தொழிலுக்கு சமூகமளிக்க வேண்டியவர்கள் தவிர ஏனையவர்கள் வீடுகளில் இருக்க வேண்டும்.

உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மட்டுமே எவரும் தமது வீடுகளில் இருந்து வெளிச்செல்ல வேண்டும்.

அத்தகைய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நடந்து சென்றடைய முடியுமான அருகில் உள்ள விற்பனை நிலையங்களை தெரிவுசெய்ய வேண்டும்.

அத்தியாவசிய தேவைகளுக்காக என்ற போதும் வீட்டிலிருந்து வெளிச்செல்ல அனுமதிக்கப்படுவது தேசிய அடையாள அட்டையின் இறுதி இரண்டு இலக்கங்களின் அடிப்படையிலாகும்.

அந்த வகையில் திங்கட் கிழமை நாட்களில் வெளிச்செல்ல அனுமதிக்கப்படுவோர் இலக்கம் 1அல்லது 2 என்ற இலக்கங்களை தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கங்களாக கொண்டுள்ளவர்கள் மட்டுமேயாகும்.

வாரத்தின் ஏனைய நாட்களில் வீடுகளில் இருந்து வெளிச்செல்வதற்கு பின்வருமாறு இடமளிக்கப்படும்.

செவ்வாய்: அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 3அல்லது 4 என்ற இலக்கத்தினை கொண்டவர்கள்

புதன்: அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 5 அல்லது 6 என்ற இலக்கத்தினை கொண்டவர்கள்

வியாழன்: அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 7 அல்லது 8 என்ற இலக்கத்தினை கொண்டவர்கள்

வெள்ளி : அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 9 அல்லது 0 என்ற இலக்கத்தினை கொண்டவர்கள்

அலுவலகங்களை திறந்து பணிகளை மேற்கொள்கின்ற போதும், பயணிகள் போக்குவரத்தின் போதும், விற்பனை நிலையங்களிலும் கொரோனா தடுப்பு சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்.

கிருமி தொற்று நீக்கம், முகக்கவசம் அணிதல் மற்றும் அவ்வப்போது கைகளை கழுவிக்கொள்ளுதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் இதில் உள்ளடங்கும்.

எவரேனும் மேற்படி ஒழுங்குகள் நடைமுறைகளை மீறுகின்றனரா என்பது தொடர்பில் பொலிஸாரும் பாதுகாப்பு படையினரும் மிகவும் விழிப்புடன் இருப்பார்கள்.

மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து, தொழில் தேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்காக மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புகள், ஏனைய கல்வி நிறுவனங்கள் மற்றும் திரையரங்குகள் மீண்டும் அறிவிக்கும் வரை மூடப்பட்டிருக்க வேண்டும்.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள ஒரு மாவட்டத்தில் ஏதேனும் ஒரு பிரதேசம் அல்லது ஒரு கிராமம் இடர்நிலைக்குள்ளான பிரதேசமாக இனம்காணப்பட்டால் அப்பிரதேசங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வகையில் முழு நாளும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட இடமுள்ளது.

ஏதேனும் ஓரு பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக குறிப்பிடப்பட்டடிருந்தால் எவரும் அங்கு உள்வருவது மற்றும் வெளியேறுவது முற்றாக தடைசெய்யப்படும்.

அனைத்து வகையான விழாக்கள், சுற்றுப்பயணங்கள், யாத்திரைகள், களியாட்டங்கள், ஊர்வலங்கள், கூட்டங்கள் போன்ற மீண்டும் அறிவிக்கும் வரை தடைசெய்யப்பட்டுள்ளன.

மக்கள் ஒன்றுகூடுவது வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு தடை என்பதால் சமய நிகழ்வுகளையும் இடைநிறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பம் முதல் மக்களின் வாழ்க்கையை இயல்புநிலையில் பேணும் வகையில் அத்தியாவசிய பொருட்கள், சேவைகளை தொடர்ச்சியாக வழங்க அரசாங்கம் அறிமுகப்படுத்திய செயற்பாடுகளை தொடர்ந்தும் பலமாக நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா பிரச்சினையிலிருந்து மக்களை விடுவித்து அவர்களின் சுகாதார பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்கு நோய்த்தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும்.

தேக்கமடைந்துள்ள பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது. வைரஸை கட்டுப்படுத்துவதற்கு மக்களின் ஒத்துழைப்பு கிடைத்தால் மட்டுமே இந்த நோக்கங்களை அடைந்துகொள்ள முடியும்.

நோய்த்தொற்றின் அபாயத்தினை விளங்கிக்கொள்ளக்கூடிய அனைத்து சந்தர்ப்பங்களிலும் வீடுகளில் இருப்பதும், வழங்கப்பட்டுள்ள சுகாதார அறிவுறுத்தல்களை 100 வீதம் பின்பற்றுவதும் மக்கள் வழங்கக்கூடிய ஒத்துழைப்பு என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தம்முடையவும் பிள்ளைகளுடையவும், தேசத்தினதும் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக அனைத்து கஷ்டங்களையும் பொறுப்புடன் சகித்துக்கொள்ளுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

சமூகத்தின் நலனுக்கு தடையேற்படுத்தும் வகையில் நடந்துகொள்ளும் எவருக்கும் நடைமுறையில் உள்ள சட்டத்தின் கீழ் அதிக பட்ச தண்டனை வழங்கப்படும் என குறித்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply