ஆலப்புழாவில் உள்ள தண்ணீர்முக்கம் கிராம பஞ்சாயத்தில் உள்ள மக்கள் வெளியில் செல்லும்போது குடைகளை எடுத்துச் செல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் முதன்முதலாக கேரளா மாநிலத்தில்தான் கண்டறியப்பட்டது. அதேபோல் தொடக்கக்காலத்தில் கேரளாவில்தான் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

ஊரடங்கு உத்தரவை சரியாக கடைபிடித்தல், பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பை கண்டறிதல், பரிசோதனையை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகளில் துரிதமாக செயல்பட்டு கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. மேலும் நோயாளிகளை குணப்படுத்தி டிஸ்சார்ஜ் செய்வதிலும் முதன்மை மாநிலமாக செயல்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்தாலும் முற்றிலுமாக ஒழிக்க நீண்ட மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது. இதனால் மக்கள் வெளியில் சென்றால் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடித்தே ஆக வேண்டும் என்ற நிலை உள்ளது.

சில இடங்களில் மக்கள் கொரோனா வைரசின் ஆபத்தை அறியாமல் கூட்டகூட்டமாக செல்கின்றனர். மனித இடைவெளியை கடைபிடிக்க என்ன செய்யலாம் என யோசித்து வரும் நிலையில், கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள தண்ணீர்முக்கம் கிராம பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு ஒரு யோசனை தென்பட்டது.

அங்குள்ள மக்கள் வெளியே சென்றால் கட்டாயம் குடை கொண்டு செல்ல வேண்டும். குடையை பயன்படுத்தும்போது இரண்டு குடைகள் ஒன்றுக்கொண்டு இடிக்காமல் விரிக்கப்பட்டிருக்கும்போது எப்படியும் ஒரு மீட்டர் இடைவெளி உண்டாகும். இதனால் தானாகவே இடைவெளியை கடைபிடிக்க வேண்டியதாகிவிடும். இப்படி செய்தால் மக்கள் தானாகவே சமூக இடைவெளியை பின்பற்ற தொடங்கி விடுவார்கள் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

இதனால் கொடையை கொண்டு செல்வது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அம்மாநில மந்திரி தாமஸ் ஈசாக் மானிய விலையில் மக்களுக்கு கடை வழங்கி ஊக்கப்படுத்தினார்.

Share.
Leave A Reply