இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வெகுவாக அதிகரித்து வருகின்றது.

இதற்கமைய, இன்றைய தினம் வரை கொரோனா தொற்றுக்குள்ளான 505 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

கொரோனா தொற்றுக்குள்ளான 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 120 பேர் சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், 350 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், 273 பேர் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 95 பேர் கடற்படையினர் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள கடற்படையினரில் 68 பேர் வெலிசர முகாமிலுள்ளவர்கள் எனவும், 27 பேர் விடுமுறை நிமிர்த்தம் வீடுகளுக்கு சென்றுள்ளவர்கள் எனவும் இராணுவ தளபதி குறிப்பிடுகின்றார்.

வெலிசர முகாம் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அந்த முகாமிலுள்ள பெரும்பாலான கடற்படையினர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

அதுமாத்திரமன்றி, அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கி பழகியவர்கள் என அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சுய கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவம் கூறுகின்றது.

பாதுகாப்பு பிரிவினருக்கான விடுமுறைகள் ரத்து

இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியோருக்கான விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது.

முப்படைகளின் உயர் அதிகாரிகள், சிறப்பு தரத்திலுள்ள அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்குமான விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

விடுமுறைக்கு சென்றுள்ள அனைத்து அதிகாரிகளையும் உடனடியாக முகாம்களுக்கு சமூகமளிக்குமாறும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

விடுமுறையில் சென்றுள்ள பாதுகாப்பு பிரிவினரை அழைத்து வருவதற்கான விசேட திட்டமொன்றை அரசாங்கம் வகுத்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும புத்தளம் ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு நாளைய தினம் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

விடுமுறைகளுக்காக வீடுகளுக்கு சென்றுள்ள முப்படையினரை விரைவில் முகாம்களுக்கு அழைத்து வரும் நோக்குடனேயே இந்த நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

இந்த நிலையில், அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும புத்தளம் ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கான ஊரடங்கு நாளை மறுதினம் அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டு இரவு 8 மணிக்கு மீண்டும் அமல்படுத்தப்படவுள்ளது.

சடலங்களை அகற்றும் 1000 உறைகளை கோரியது இலங்கை

சடலங்களை அகற்றுவதற்காக பயன்படுத்தப்படும் 1000 உறைகளை செஞ்சிலுவை சங்கத்திடம் இலங்கை சுகாதார அமைச்சு கோரியுள்ளது.

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சுனில் டி அல்விஸின் கையெழுத்துடன் இந்த உறைகளுக்கான கோரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சடலங்களை பொதி செய்யும் 1000 உறைகள் கோரப்பட்ட நிலையில், இலங்கை மக்கள் மத்தியில் பாரிய அச்ச நிலைமையொன்று இன்று ஏற்பட்டது.

கொவிட் வைரஸ் தாக்கம் காரணமாக பெருமளவானோர் உயிரிழந்துள்ளார்களா என்ற அச்ச நிலைமை ஏற்பட்டதை அடுத்து பிபிசி தமிழ், டொக்டர் சுனில் டி அல்விஸை தொடர்புக் கொண்டு வினவியது.

கொவிட் காரணமாக அவ்வாறான அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லை என அவர் உறுதிப்படுத்தினார்.

ஏதேனும் உயிரிழப்புக்களில் சந்தேகங்கள் நிலவும் பட்சத்தில், அவ்வாறான பூதவுடல்களை பாதுகாப்பான உறைகளில் பொதி செய்தே அவற்றை அடக்கம் செய்வது வழக்கம் என அவர் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறான நிலையில், இலங்கையில் சந்தேகத்திற்கிடமான உயிரிழப்புக்கள் பதிவாகும் பட்சத்தில் அவற்றை அகற்றுவதற்கான உறைகள் பற்றாக்குறை நிலவியமையினால் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், இந்த உறைகளை பெற்றுத் தருமாறு செஞ்சிலுவை சங்கத்திடம் கோரியுள்ளதாகவும் டொக்டர் சுனில் டி அல்விஸ் குறிப்பிட்டார்.

சுகாதார அமைச்சு கோரிக்கை கடிதமொன்றை கையளிக்கும் பட்சத்தில், அந்த உறைகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என செஞ்சிலுவை சங்கம் அறிவித்த பின்னணியிலேயே தான் இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக டொக்டர் சுனில் டி அல்விஸ் பிபிசி தமிழுக்கு கூறினார்.

கொவிட் – 19 உயிரிழப்புக்கள் மாத்திரமன்றி, அனைத்து விதமான சந்தேகத்திற்கிடமான சடலங்களை பொதி செய்து, அகற்றுவதற்காக இந்த உறைகள் பயன்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.

வெளிநாடுகளிலுள்ள மாணவர்களை அழைத்து வரும் அரசாங்கம்

வெளிநாடுகளில் நிர்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை அழைத்துவரும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக மாணவர்களை இலங்கை அரசாங்கம் கட்டம் கட்டமாக அழைத்து வருகின்றது.

இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் கல்வி பயிலும் மாணவர்கள் முதற்கட்டமாக அழைத்து வரப்படுவதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவிக்கின்றது.

இந்த திட்டத்தின் கீழ் இந்தியாவின் கோயம்புத்தூரில் கல்வி பயின்ற 113 இலங்கையர்கள் இன்றைய தினம் அழைத்து வரப்பட்டனர்.

இதற்கு முன்னரும் நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் அழைத்து வரப்பட்டதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்திருந்தது.

இதைத்தவிர, வெளிநாடுகளில் நிர்கதிக்குள்ளாகியுள்ள 60,000திற்கும் அதிகமான இலங்கையர்கள் மீண்டும் நாட்டிற்கு வர இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

அவ்வாறு இலங்கைக்கு வருகைத்தர விருப்பம் தெரிவித்துள்ள இலங்கையர்களை அழைத்து வருவதற்கான திட்டம் வகுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Share.
Leave A Reply