தமிழகத்தில் மனைவி இறந்தது தெரியாமல், 90 வயது முதியவர் சடலத்திற்கு பால் ஊட்டி வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே இருக்கும் செங்குளம் கிராமத்தை சேர்ந்த தம்பதி பாண்டி (90) – ஆண்டாள்.  இவர்களுக்கு மூன்று மகன்கள் 3 மகள்கள் உள்ளனர். இதில் ஒரு மகன் மற்றும் மகள் இறந்துவிட்டனர். இதையடுத்து 4 பிள்ளைகளில் 3 பேர் தங்களது குடும்பத்தினருடன் கோவையிலும் ஒருவர் தேனி மாவட்டத்திலும் வசித்து வருகின்றனர்.

நன்கு வசதி படைத்தவரான பாண்டி வீட்டின் முன் பகுதியை வாடகைக்கு விட்டு விட்டு பின்புறம் வசித்து வந்துள்ளார். வெளியூரில் இருக்கும் பிள்ளைகள் அவ்வப்போது, கிராமத்திற்கு வந்து பாண்டி மற்றும் ஆண்டாளை பார்த்துவிட்டு செல்வர்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஆண்டாள் கீழே விழுந்து காயம் ஏற்பட்டதால், படுக்கை படுகையாக கிடந்தார். இதனால் வீட்டில் இருக்கும் மனைவியை பாண்டி தான் கவனித்து வந்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக தற்போது ஊரடங்கு அமுலில் உள்ளது, இதனால் இவரின் பிள்ளைகள் வரமுடியாத சூழ்நிலையால் பாண்டி மற்றும் ஆண்டாள் சாப்பாட்டிற்கு சிரமப்பட்டு வந்துள்ளனர்.

இதன் காரணமாக, அருகில் இருக்கும் உறவினர்களிடம் பிள்ளைகள், தங்களுடைய பெற்றோருக்கு உணவளிக்குமாறு கூறியுள்ளனர். அதன் படி அவர்களும் கொடுத்து வந்துள்ளனர். ஆனால் சமீபத்தில் திருமங்கலத்தில் 5 பேருக்கு கொரோனா உறுதியானதால், அங்கு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. உறவினர்களும் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், உணவுக்கு சிரமப்படுவதாக பாண்டி தனது பிள்ளைகளிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பாண்டியின் மகள் நாகலட்சுமி அரசின் அவசர உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு திருமங்கலத்தில் உள்ள தனது பெற்றோருக்கு உணவு அளிக்குமாறு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இந்த தகவல் திருமங்கலம் கோட்டாட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட, அவரின் உத்தரவின் திருமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் நேற்று இரவு உணவு எடுத்துக் கொண்டு பாண்டியிடம் கொடுப்பதற்காக அவர் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்குள் சென்ற கிராம நிர்வாக அலுவலர் பாண்டியின் மனைவி ஆண்டாள் உடம்பில் துணி இல்லாமல் முழு நிர்வாணமாக தரையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக கோட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன் பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் வீட்டில் துர்நாற்றம் வீசுவதையும், ஆண்டாள் இறந்து இரண்டு நாட்களுக்கு மேல் ஆகியிருக்கும் என்பதை அறிந்துள்ளனர். ஆனால், இது தெரியாமல் நாட்களாக மனைவிக்கு பாண்டி அவ்வப்போது பால் ஊட்டி வந்துள்ளார்.

இறந்த ஆண்டாளின் உடலை மீட்ட பொலிசார், பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆண்டாள் இறந்த சம்பவம் குறித்து அவர்களது பிள்ளைகளுக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply