கொவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் சமூகத்திலான பரவலாக பரிமாணமடைய அதிக வாய்ப்புகள் உள்ள நிலையில் ஊரடங்கை அரசாங்கம் தளர்த்தி நாட்டினை வழமைக்கு கொண்டுவர நினைப்பது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவிக்கின்றது. வைரஸ் பரவலானது அதன் மூன்றாம் கட்டத்தில் இருப்பதால் அடுத்தது சமூக பரவலாக மாறலாம் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

கொவிட் -19 கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் தற்போது எவ்வாறான நிலைமையில் உள்ளது என்பது குறித்து  தொற்றுநோய் தடுப்பு பிரிவின் உடற்கூற்று மருத்துவ நிபுணர் வைத்தியர் ஆனந்த விஜயவிக்கிரம இது குறித்து கூறுகையில்,

நாட்டில் ஊரடங்கை தளர்த்த மீண்டும் நடவைக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் மீண்டும் மக்களை வீதிக்கு இறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பிரச்சினைகள் ஏற்படும் என்பதே உண்மையாகும். நாட்டின் பொருளாதாரம், மக்களை  வாழ்வாதாரம் என்பவற்றை கருத்தில் கொண்டு அரசாங்கம் சில தீர்மானம் எடுத்திருப்பார்கள் என நம்புகின்றோம்.

எனினும் நாட்டில் பிரச்சினைகள் முடிவுக்கு வந்துவிட்டது என கூற முடியாது. இவ்வாறான தொற்றுநோய் நீண்டகாலம் செயற்பாட்டில் இருக்கும். எனவே உடனடியாக நாட்டினை வழமைக்கு கொண்டுவருவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

கொவிட் -19 வைரஸ் பரவலில் இப்போது மூன்றாம் கட்டத்தில் நாம் உள்ளோம். தனித்தனி நபர்கள் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றனர். நான்காம் கட்டம் சமூகத்தில் நோய் பரவலாகும். அதற்கு இன்னமும் பயணிக்கவில்லை. நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டவுடன் அவர் பயணித்த விதம், பழகிய நபர்கள், எவ்வாறு நோய் பரவியது என்பது கண்டறியப்படுவதால் இது சமூக பரவல் என கூற முடியாது.

ஆனால் சமூக பரவலுக்கான கட்டத்திலேயே உள்ளது. அதனை கட்டுப்படுத்த இறுக்கமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். சமூகத்தில் பரவல் ஆரம்பித்தால் அதன் பின்னர் நோய் எவ்வாறு பரவுகின்றது, யார் யார் பாதிக்கப்பட்டுள்ளனர் என கண்டறிய முடியாது. இது சமூகத்தில் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்தும். இன்று ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காம சீனா போன்ற நாடுகளுக்கு நேர்ந்ததும் அதுவே. இந்த சமூக பரவல் இலங்கையில் ஏற்பட்டால் நிலைமைகளை கட்டுப்படுத்த கடினமாக அமையும்.

ஏனைய நோய்களை போல் கொவிட் -19 வைரஸ் பரவலின் தாக்கம் எவ்வாறு அமையும் என்பது குறித்து எம்மால் கணிப்பிட முடியாதுள்ளது. எவ்வளவு காலம் செயற்பாட்டில் இருக்கும், மீண்டும் இரண்டாம் மூன்றாம் சுற்றில் தாக்கம் செலுத்துமா, தன்மைகள் எவ்வாறானது என்ற எதுவுமே தெரியாத நிலையில் தான் உலகம் பூராகவும் இவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் நாம் ஆரம்பம் தொடக்கம் கடினமான சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுத்த காரணத்தினால் பரவல் வேகத்தை இப்போது வரையில் கட்டுப்படுத்த முடிந்துள்ளது. ஆனால் எதிர்காலத்தில் எவ்வாறான தாக்கம் செலுத்தும் என்பது குறித்து எதிர்வுகூற முடியாது. ஆனால் நோய் பரவலுக்கான அதிக வாய்ப்புகள் உள்ளது எனவும் அவர் கூறினார்.

Share.
Leave A Reply