இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் ஊரடங்கு விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மத்திய ரிசர்வ் பொலிஸ் படையில் கமாண்டோ அதிவிரைவு படை பிரிவைச் (சி.ஆர்.பி.எப்) சேர்ந்த வீரர் ஒருவர் பொலிஸாரால் பொலிஸ் நிலையத்தில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டார்.
கர்நாடகாவின் பெலகாவி நகரை சேர்ந்தவர் சச்சின் சவாந்த். மத்திய ரிசர்வ் பொலீஸ் படையில் கமாண்டோ அதிவிரைவு படை பிரிவில் பணியாற்றி வருகிறார். மாவோயிஸ்டுகள் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சச்சின், கொரில்லா போர் முறையில் திறன் வாய்ந்தவர் ஆவார்.
இந்நிலையில், தனது வீட்டில் விடுமுறையில் இருந்த இவர், சீருடையின்றி வழக்கம்போல் அணியும் ஆடைகளுடன் வெளியே சென்றுள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில், முகக் கவசம் அணிய வேண்டியது கட்டாயம் என அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால், முகக்கவசம் அணியாமல் வெளியே சென்றார் என்பதற்காக சச்சின் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டுள்ளார். இதுபற்றிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது.
இதுபற்றி சி.ஆர்.பி.எப். தலைமை சார்பில், கர்நாடக தலைமை காவல் அதிகாரிக்கு எழுதியுள்ள கடிதத்தில், எங்களது வீரரை அடித்தும், கைகளைக் கட்டி போட்டும், வெறுங்கால்களுடன் பொலிஸ் நிலையத்துக்கும் இழுத்து சென்றும்,
சங்கிலிகளால் பிணைத்தும் மற்றும் தரையில் உட்கார வைத்தும் உள்ளனர். பொலிஸார் இதனை தவிர்த்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
தொடர்ந்து பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு செய்யவும் சி.ஆர்.பி.எப். தலைமை பரிசீலனை செய்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.
எனினும், முகக் கவசம் அணியாதது பற்றி கேட்ட கான்ஸ்டபிள்கள் இருவரையும், சி.ஆர்.பி.எப். வீரர் அடித்தும், உதைத்தும் உள்ளதுடன், அரசு பணியில் இருந்தவர்களை கடமையை செய்ய விடாமல் செயல்பட்டுள்ளார் என்றும் பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.