கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் திரைப்பட கலைஞர்கள் அனைவரும் வீட்டில் உள்ளனர். இந்நிலையில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி இருவரும் ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் ‘தலைவன் இருக்கிறான்’ என்ற நேரலை கலந்துரையாடலில் பங்கேற்றனர். இதில் விஜய் சேதுபதியின் கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதிலளித்தார். அதிலிருந்து ஒரு பகுதி இங்கே:
ஒரு மேடையில் இளையராஜா ‘நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும்’ என உங்களை கேட்டுக் கொண்டார். ஆனால், அரசியலுக்கு வரப் போவதையொட்டி சினிமாவில் ஒரு வசனம் கூட நீங்கள் பேசவில்லையே, ஏன்?
என்னுடைய எந்த சினிமாவை உற்றுக் கவனித்தாலும் அனைத்திலும் ஒரு கொட்டு இருக்கும். ஏதாச்சும் ஒன்று வைத்திருப்பேன். ‘வறுமையின் நிறம் சிவப்பு’ காலத்திலிருந்தே தைரியமான சில கருத்துகளை சொல்லியிருப்போம்.
‘சத்யா’ படத்தில் நேரடி அரசியல் பேசப்பட்டிருக்கும். ‘தேவர் மகன்’ படத்தில் சொல்லாமல் சொல்லியிருப்போம். ‘தேவர் மகன்’ படத்துக்கு ‘நம்மவர்’ என்றே நானும் அனந்துவும் பெயர் முடிவு செய்தோம்.
கவிஞர் வாலிதான் தேவர் மகன்தான் சரியான பெயர் என்றதும் அப்படியே வைத்தோம். அதற்காக பலர் கோபப்பட்டனர். நான் சொல்ல வந்த கருத்தை சொல்ல முடியவில்லை.
சாதி சண்டை என்றால் தமிழகத்துக்கு நிறையப் பிடிக்கும். எனது ‘ஹே ராம்’ படத்தை இன்றைக்கு பார்க்கும் போதும் சில இடங்களில் நாக்கை கடித்துக் கொள்வேன். கொஞ்சம் அளந்து போட்டிருக்கலாமே. காரம் அதிகமாகிவிட்டதே என நினைத்தது உண்டு.
அரசியலுக்கு வருவதை இவ்வளவு காலம் தள்ளிப்போட்டது ஏன்?
அதற்கான சூழலும் வயதும் வர வேண்டும். என்னை பார்த்து ‘இவன் வந்துட்டானா?” என்று யாரும் சொல்லக்கூடாது. ‘இவர்’ என்று சொல்கிற வயதுக்காக காத்திருந்தேன்.
‘ஹே ராம்’ படத்தின் தணிக்கைக் காக வண்டி நிறைய ஃபைல்கள் எடுத்துக் கொண்டு போனீர்களாமே… உண்மையா சார்?
வண்டி நிறைய என்று சொல்வது சும்மா பேச்சுக்காக சொல்வது. நிறைய ஆதாரம் எடுத்துக் கொண்டு போனேன். தணிக்கையில் நிறைய அவமானங்கள்.
தணிக்கை துறையிலும் நிறைய நல்லவர்களும், நமக்காகக் கண் கலங்குபவர்களும் இருக்கிறார்கள். ஆனால், என்ன செய்வது அது அரசாங்க வேலை. ‘ஹே ராம்’ படத்தை தணிக்கை அதிகாரிகள் பார்த்ததை விட, ஒரு எம்பி, மறைந்த சுஷ்மா ஸ்வராஜ், சத்ருகன் சின்ஹா என பாஜகவினர் அனைவரும் அந்தப் படத்தை வெளியே விட வேண்டுமா, இல்லையா என்பதை முடிவு செய்ததும்தான் அந்தப் படம் வெளியானது.
இது சரித்திரம். அதில் எனக்கு பெரிய அவமானம் என்னவென்றால், சில காங்கிரஸ்காரர்கள் அப்படத்தை காந்திக்கு எதிரான படம் என்று சொல்லி, அப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என குரல் கொடுத்தனர். அதில் வருத்தப்பட்டது காந்தியின் கொள்ளு பேரன் துஷார் காந்தியும் நானும்தான். நான் காந்திக்கு செய்த மிகப்பெரிய மரியாதையாக அதை நினைக்கிறேன்.