இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,263ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 2,487 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்த 83 பேரையும் சேர்த்து, இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,306ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 10,887 பேர் கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 3,000ஐ தாண்டியது

தமிழகத்தில் இன்று (மே 3) ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,023ஆக உயர்ந்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, இன்று கொரோனா தாக்கத்தால் ஒருவர் இறந்துவிட்டார் என்பதால் தமிழகத்தில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளது. புதிதாக இன்று 38 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1379ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை ஒரே நாளில் 250க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்கு ஆளானது இதுவே முதல்முறையாகும். தமிழகத்தில் இந்நாள்வரை பாதிக்கப்பட்ட 3,023 நபர்களில் 2,015 பேர் ஆண்கள் என்றும், 1,007 பேர் பெண்கள் என்றும் ஒருவர் திருநங்கை என்றும் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.

அதிகபட்சமாக சென்னையில் 1,458 நபர்களும், கோவையில் 146 நபர்களும், திருப்பூரில் 114 நபர்களும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

குறைவான பாதிப்பு ஏற்பட்ட மாவட்டங்களின் பட்டியலில் தர்மபுரி, புதுக்கோட்டையில் தலா ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை எந்த பாதிக்கப்பட்ட நபரும் இல்லை என்பதால், பச்சை மண்டலமாக தொடர்கிறது என அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் அதிகபட்சமாக, சென்னையில் 17 பேரும், விழுப்புரம், மதுரை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தலா இரண்டு பேரும் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share.
Leave A Reply