இலங்கையில் கொவிட்-19 பிரச்சனை வலுப் பெற்றுள்ள நிலையில், நாடாளுமன்றமும் வலுவிழந்துள்ளமை பாரிய பிரச்சினையாக காணப்படுகிறது.
நாடாளுமன்றத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பொன்றை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலரிமாளிகையில் இன்று நடத்தினார்.
இலங்கையின் பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் இந்த அலரிமாளிகை கூட்டத்தை புறக்கணித்திருந்தன.
எனினும், அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த கூட்டத்தை புறக்கணித்த நிலையில், கடந்த நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரம் கலந்துக்கொண்டது..
கூட்டத்தில் கலந்துக்கொண்டது மாத்திரமன்றி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய ஆவணமொன்றையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கையளித்தது.
கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகள், ஜனாதிபதிக்கு வேண்டுகோள் விடுத்திருந்தன. இந்த வேண்டுக்கோளுக்கான பதில் இதுவரை எதிர்மறையானதாகவே இருந்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது அறிக்கையில் தெரிவிக்கிறது.
இந்த நிலையில், நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளக்கமளித்துள்ளது.
உலகளாவிய கொள்ளை நோய் – கொரோனா வைரஸ் படிப்படியாக மோசமடைந்து வருவதாகவும், நாட்டிலிருந்து அதனை முழுமையாக ஒழிப்பதற்கு இன்னும் அதிகமான வேலைகளை செய்ய வேண்டும் எனவும் கூட்டமைப்பு கூறியுள்ளது.
பாரதூரமான விளைவுகளோடு அது மேலும் மோசமடையும் என்ற நியாயமானதோர் அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வருவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதமருக்கு கையளித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
1994ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலம் வரை நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் மக்கள் தமது இறைமை மற்றும் வாக்குரிமைகளின் ஊடாக 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பை நிராகரித்துள்ளதாக அந்த அறிக்கையின் ஊடாக கூறப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி, அடிப்படை உரிமைகள் மற்றும் வாக்குரிமை ஆகிய தமது இறைமையின் – ஆட்சி அதிகாரங்களின் – மூன்று அம்சங்களையும் (சட்டவாக்கம், நிறைவேற்று மற்றும் நீதித்துறை அதிகாரங்கள்) உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பொன்றை நிறைவேற்றுவதற்கான ஆணையை மக்கள் இதுவரை வழங்கியுள்ளதாகவும் கூட்டமைப்பு குறிப்பிடுகின்றது.
தமது இறைமையை பிரயோகித்து மக்கள் வழங்கிய இவ்வாணை நிறைவேற்றப்படாததோடு, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக மக்களால் நிராகரிக்கப்பட்டுவரும் ஓர் அரசியலமைப்பின் கீழேயே நாடு தொடர்ந்தும் ஆளப்படுவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.
அத்துடன், தமிழர்களின் பிரச்சினைகள் குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டின் நலனிற்காகவும், அதன் மக்களின் நலனிற்காகவும் இந்த விடயங்கள் அனைத்தையும் நியாயமானதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதுமான ஒரு முறையில் தீர்த்து வைப்பதற்கு தமது ஆதரவை வழங்கத் தயாராக உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இதனாலேயே பிரதமருடனான சந்திப்பில் கலந்துகொள்ள வேண்டும் என தாம் தீர்மானித்ததாக கூட்டமைப்பின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இன்றைய தினம் இடம்பெற்ற கூட்டமானது, நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான ஒரு மாற்றீடாக அமையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.
கொரோனா வைரஸால் இலங்கையில் உண்டாகியுள்ள அரசியல் குழப்பம்
கொரோனா தொற்று ஊரடங்கு: சேதமாகும் அபாயத்தில் புராதன ஓவியங்கள்
நாட்டில் தற்போது காணப்படுகின்ற அரசியலமைப்பு மற்றும் சட்டப் பிரச்சினைகளை கையாள்வதற்காக நாடாளுமன்றத்தை விரைவில் கூட்ட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளது.
எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு
அலரி மாளிகையில் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவிர்த்த ஏனைய எதிர்க்கட்சிகள் புறக்கணித்திருந்தன.
நாடாளுமன்றத்தை கூட்டுமாறு ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கைகளை விடுத்திருந்த போதிலும், நாடாளுமன்றத்தை கூட்ட முடியாது என ஜனாதிபதி அறிவித்திருந்தார். இந்த நிலையிலேயே இந்தப் புறக்கணிப்பு நடந்தது.
இன்றைய கூட்டம்
கோவிட் – 19 ஒழிப்பு தொடர்பிலேயே இன்றைய தினம் முழுமையாக கவனம் செலுத்தப்பட்டதாக இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்தார்.
குறிப்பாக இன்றைய கலந்துரையாடலுக்காக கடந்த மூன்று நாடாளுமன்றங்களை பிரதிநிதித்துவப்படுத்திய மக்கள் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் கொரோனா தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள திட்டங்கள் தொடர்பிலான காணொளியொன்று காண்பிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், கொரோனாவை முழுமையாக காட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது கடினமான விடயம் என கூறியுள்ள அரசாங்க தரப்பு, இயலுமான வரை முழுவதுமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதையடுத்து கேள்விகளை வினவுவதற்கான சந்தர்ப்பத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தனுக்கு முதலாவது சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எழுத்து மூலமான கோரிக்கைகளை மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளி்த்தது.
குறிப்பாக சொந்த மாவட்டங்களிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு சென்று நிர்கதிக்குள்ளாகியுள்ளவர்களை சொந்த இடங்களுக்கு அழைத்துச் செல்ல அரசாங்கம் முறையான திட்டமொன்றை முன்னெடுக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நிவாரண உதவிகளை உரிய முறையில் வழங்கவும் நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


