இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது.

ஐ.டி.எச் தொற்று நோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 72 வயதான பெண்ணொருவர் இன்று உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவிக்கின்றார்.

வெலிசறை கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று  ஏற்பட்ட நிலையில்,  அவர்களது 2 ஆம் கட்ட தொடர்பாளர்கள் தொடர்பில்  அவதானம் செலுத்தப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது, குருணாகல் வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட விடுமுறைக்கு சென்றிருந்த கடற்படை  வீரர் ஒருவரின் தொடர்பாடல் வட்டம், உளவுத் துறையால் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கும்  கொரோனா தொற்று குறித்த பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

அவ்வாறு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் போது 72 வயதான பெண்னுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில், அவர் சிகிச்சைகளுக்காக  ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். குறித்த பெண் சிறுநீரக கோளாறு உள்ளிட்ட நோய் நிலைமைகளாலும் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே,  ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று மாலை  உயிரிழந்தார். அவரது இறுதிக் கிரியை நாளை இடம்பெறவுள்ளது.

இந் நிலையில் இன்று இரவு 8.15 வரையிலான 12 மணி நேரத்தில் நாட்டில் 3 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இதுவரை இலங்கையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் எண்ணிக்கை 721 ஆக உயர்ந்தது.

அத்துடன் நேற்றும் 10 பேர் வரையில் பூரண குண்மடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியிருந்த நிலையில், இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றின் பின்னர் குணமடைந்தோர் எண்னிக்கை 194 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் மேலும் 519 தொற்றாளர்கள் தொடர்ந்தும் அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை, வெலிகந்த, முல்லேரியா ஆதார வைத்தியசாலைகள், காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, மினுவங்கொடை வைத்தியசாலை, கடற்படை வைத்தியசாலை  மற்றும் சிலாபம் – இரணவில் வைத்தியசாலை, ஹோமாகம ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அத்துடன் மேலும் 137 பேர் கொரோனா சந்தேகத்தில் 29 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களில்   3 வெளிநாட்டவர்கள் உள்ளடங்குகின்றனர்.  அத்துடன் வெளிநாடுகளில் இருந்து வந்து நேரடியாக தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 41 பேரும், உள் நாட்டிலிருந்து தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு  உட்பட்ட நிலையில் கண்டறியப்பட்ட 63 பேரும்   இதுவரை கண்டறியப்பட்ட தொற்றாளர்கள் பட்டியலில் உள்ளடங்குகின்றனர்.  இதனைவிட முப்படைகளைச் சேர்ந்த 313 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு மேலதிகமாக கொழும்பு மாவட்டத்தில் 149 தொற்றாளர்களும், புத்தளத்தில் 35 தொற்றாளர்களும், கம்பஹா  மாவட்டத்தில் 34 தொற்றாளர்களும் களுத்துறை மாவட்டத்தில் 29 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.

கண்டி மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் 12 ஆகும். குருணாகல் மாவட்டத்தில் 10 பேரும்,  யாழ். மாவட்டத்தில் 7 பேரும்,  இரத்தினபுரியில் 5 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,  கேகாலை மற்றும் மொனராகலை ஆகிய சுகாதார மாவட்டங்களில் தொற்றாளர்களாக தலா 4 பேர் வீதம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அனுராதபுரம் மற்றும் கல்முனை ஆகிய சுகாதார மாவட்டங்களில் தலா இருவர் வீதமும்,  பதுளை, மாத்தறை, காலி,  மட்டக்களப்பு, பொலன்னறுவை சுகாதார மாவட்டங்களில் தலா ஒவ்வொரு  கொரோனா தொற்றாளர் வீதமும் அடையாளம் காணப்பட்டதாக  சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply