பொருளாதாரம் சீர்குலைவு காரணமாக 2.9 டிரில்லியன் டாலர் கடன் வாங்குவதற்கு அமெரிக்க அரசின் நிதித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனாவால் அமெரிக்க பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. இதன் காரணமாக அந்த நாட்டின் நிதித்துறை ரூ.217 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடாக அமெரிக்கா தலை நிமிர்ந்து நின்றது. இந்த நிலை, சற்றும் எதிர்பாராத வகையில் கொரோனா வைரஸ் என்ற கொலைகார வைரசால் தலைகீழாகி விட்டது. அமெரிக்க பொருளாதாரம் சீர்குலைந்து போய் உள்ளது.

சுமார் 70 ஆயிரம் பேரை இந்த வைரஸ் அங்கு கொன்றுள்ள நிலையில், தொடர் ஊரடங்கால் முடங்கிப்போன பொருளாதார நடவடிக்கைகளை 10-க்கும் மேற்பட்ட மாகாணங்கள் திறந்து விட்டுள்ளன. ஆனால் இதன் காரணமாக கொரோனா வைரஸ் தாக்குதல் இன்னும் மோசமாகும் ஆபத்து உள்ளதாகவும், தினந்தோறும் 3 ஆயிரம் பேர் பலியாகும் நிலை உருவாகும் எனவும் புதிய கணிப்புகள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில், இதுவரை இல்லாத வகையில் 2.9 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ.217 லட்சம் கோடி) பெரும் கடன் வாங்குவதற்கு அமெரிக்க அரசின் நிதித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கடனை ஏப்ரல்-ஜூன் காலாண்டில் வாங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.

இதுபற்றி ‘வால் ஸ்டிரிட் ஜர்னல்’ பத்திரிகை கூறுகையில், “2008-ம் ஆண்டு நிதி நெருக்கடியின் உச்சத்தில் வாங்கப்பட்ட கடனைவிட இது 5 மடங்கு அதிகம் ஆகும்” என தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஜூன் இறுதியில் ரொக்க கையிருப்பு 800 பில்லியன் டாலர் அளவில் (சுமார் ரூ.60 லட்சம் கோடி) இருக்கும் எனவும் கூறி இருக்கிறது.

இந்தநிலை கொரோனா வைரஸ் தாக்கத்தால்தான் ஏற்பட்டுள்ளது. தனி நபர்களுக்கு உதவவும், தொழில் நிறுவனங்களுக்கு உதவவும், வரி வருவாயில் மாற்றங்கள் செய்யவும் இந்த கடன் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மொத்த பொருளாதாரத்தில் 14 சதவீத அளவுக்கு சமீபத்திய செலவு தொகுப்புகள் அமையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வரி செலுத்தும் கெடு ஏப்ரல் 15-ந் தேதி இருந்து நீட்டித்திருப்பதுவும் பண நெருக்கடிக்கு ஆளாக்கி உள்ளது.

அங்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் 3.7 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ.277 லட்சம் கோடி) துண்டு விழும் என கணிக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் தேசிய கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 100 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது.

Share.
Leave A Reply