இளையராஜாவிடம் பேசிய அனுபவம் குறித்து பகிர்கின்றனர் லிடியனும், அவர் தந்தையும்…
“வீட்டுல எப்பவுமே என்னோட மனைவிக்கிட்ட இளையராஜா சார் பற்றி பேசிக்கிட்டே இருப்பேன். `வேர்ல்டு பெஸ்ட்’ விருது லிடியன் வாங்குனதுக்கு அப்புறம் நிறைய பாராட்டுகள் வந்தது.
ஆனா, இளையராஜா சார்கிட்ட இருந்து ஒரு போன் வந்திருந்தா நல்லாயிருந்திருக்கும்’னு வருத்தப்பட்டுட்டே இருப்பேன். ஒவ்வொரு நாளுமே இளையராஜா சார் பற்றி பேசிக்கிட்டேதான் இருப்போம்.
அவரோட ஒவ்வொரு இசை நிகழ்ச்சிக்கும் போவேன். வீட்டுக்கு வந்தவுடனே, `இன்னைக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு. இளையராஜா சார் பாட்டு இல்லனா உயிரோட இருக்க மாட்டோம் போல’னு சொல்லுவேன்.
அவர் முன்னாடி வாசிச்சுக் காட்டணும்னு ஆசைப்பட்டிருக்கேன். `டேய் நல்லா வாசிக்கிறே தம்பி’ னு பாராட்டை வாங்கணும்னு நினைப்பேன்.
ஆனா, இந்த ஆசை என் பசங்க மூலமா இப்போ நிறைவேறியிருக்கு” – படபடவெனப் பேசுகிறார் உலகப் புகழ் பெற்ற இளம் இசைக்கலைஞன் லிடியன் நாதஸ்வரத்தின் தந்தை, வர்ஷன் சதிஷ்.
“உலகமே லாக்டௌன் காலத்துல ஃப்ரீயா இருக்குறப்போ இளையராஜா சாரை கொஞ்சம் ரீச் பண்ண முடியும்னு நம்பிக்கை இருந்தது.
எந்த மியூசிக் ஷோவுக்கும் போனாலும் இளையராஜா மற்றும் ரஹ்மான் சார் பற்றி லிடியன் பேசாம இருக்க மாட்டான். லிடியன் அமெரிக்கா மியூசிக் ஷோல கலந்துக்கிட்டதுக்குப் பிறகு, ரஹ்மான் சார் வீட்டுக்கே வந்து வாழ்த்து சொல்லிட்டுப் போனார்.
ஆனா, `இளையராஜா சார்கிட்ட இருந்து எதுவும் ரெஸ்பான்ஸ் இல்லையா’னு பார்க்குறவங்களெல்லாம் கேட்டுக்கிட்டே இருப்பாங்க. `சாரோட உலகம் முற்றிலும் வேற.
அவருக்கான உலகத்துல அவர் இயங்கிட்டு இருப்பார். அதனால சாருக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பிருக்காது’னு பதில் சொல்லிருவேன். அதே மாதிரி, `மியூசிக்ல ஆர்வம் இருக்குற லிடியன் பற்றி தெரிஞ்சா, தலைமேல தூக்கி வெச்சிக்கிட்டு ஆடுவார்’னு சொல்லிட்டு வந்துருவேன்.’
இப்படியிருக்குற சூழல்ல, “எனக்கொரு வரம் வேணும்’னு கேப்ஷன் போட்டு லாக்டௌன் முடியுற வரைக்கும் இளையராஜா சார் பாட்டு வாசிச்சு, ஃபேஸ்புக்ல போஸ்ட் போடுவோம்.
அது அவர் கண்ணுல பட்டா நல்லாயிருக்கும்’னு யோசிச்சோம். ஆனா அப்புறம், இது ரொம்ப செயற்கைத்தனமா இருக்கும்னு விட்டுட்டோம். அதனால யூ-டியூப்ல வெறும் பாட்டு மட்டும் போட்டுட்டு வந்தேன்.
அப்போ, ஒரு ஆல்பத்துல இருந்து போன்கால் வந்தது. `யாரை கேட்டு இப்படி பண்ணிக்கிட்டு இருக்கீங்க’னு கேட்டாங்க. அன்பின் மிகுதியால் பண்றோம்னு சொன்னேன். அவங்களும் புரிஞ்சிக்கிட்டு விட்டுட்டாங்க.
இளையராஜா சாரின் மேனேஜர் ஶ்ரீராம் சார், இளையராஜா சார்கிட்ட எங்களைப் பற்றி சொல்லியிருக்கார். அதுக்கு அப்புறம் ஶ்ரீராம் சார் போன் பண்ணி, `சார், லாக்டௌன் முடிஞ்சு உங்களைப் பார்க்குறேன்னு சொல்லியிருக்கார்.
இளையராஜா சார், எல்லா வேலைகளிலும் இந்தப் பசங்க நம்ம அசோசியேட்டா இருக்கட்டும்’னு சொன்னார். இதைக் கேட்ட உடனே சந்தோஷம் தாங்கல.
அப்போ லிடியன்கிட்ட, `சாரின் திருவாசகம் ஆல்பம் கேட்டுப் பார்ப்போமா’னு கேட்டேன். வீட்டுல எல்லாரும் கேட்டாங்க. `டாடி இது மாதிரியான இசை இதுவரைக்கும் கேட்டதில்லை.
அங்கிள் வேற லெவல். செமையா பண்ணியிருக்கார்’னு லிடியன் சொன்னான். `இளையராஜா சாருக்காக இதை ரீகிரியேட் பண்ணி அனுப்பலாமா’னு கேட்டேன். `ஓகே டாடி’னு சொன்னான்.
இதுல 20 நிமிஷத்துக்கு ஒரு பாட்டு இருக்கும். ரொம்ப சவாலான பாட்டும் கூட. இதை ரீ கிரியேட் பண்ணலாம்னு முடிவு பண்ணோம். லிடியன் எல்லாத்தையும் உன்னிப்பா கேட்டான்.
அவனுக்கும் இந்த வேலை பிடிச்சிருந்தது. எங்களோட சின்ன முயற்சியா `பொல்லா வினையேன்’ பாட்டை எடுத்து வேலைபார்த்தோம்.
இதுல லிடியன்கூட அவங்க அக்காவும் சேர்ந்துக்கிட்டாங்க. முடிக்க அஞ்சு நாள் ஆச்சு. முடிஞ்சதுக்குப் பிறகு ஶ்ரீராம் சார்கிட்ட, `சார் மேல இருக்குற அன்புனால இப்படியொரு பாட்டை ராஜா சாருக்கு ரெடி பண்ணுனோம்.
ஆர்வக்கோளாறுல எதுவும் பண்ணல’ன்னு சொல்லி அனுப்பிவெச்சேன். இதை இளையராஜா சார் பார்த்துட்டுத்தான் வீடியோ கால் மூலமா எங்ககிட்ட பேசினார்” என லிடியன் அப்பா சொல்லி முடிக்க, லிடியன் தொடர்ந்தார்.
“ `எப்படியிருக்க தம்பி’னு நலம் விசாரிச்சார். `ஏன் இவ்வளவு டைம் போட்டு பண்ணீங்க. கஷ்டமா இருந்திருக்குமே’னு கேட்டார்.
`இல்லை அங்கிள் கஷ்டமா தெரியல’னு சொன்னோம். நாங்க எல்லாரும் சந்தோஷத்தோட உச்சத்துல இருந்து சார்கிட்ட பேசினோம். பத்து நிமிஷம் வரைக்கும் பேசினார்.
இளையராஜா அங்கிள் சில வேலைகளை கொடுத்திருக்கார். அதை செஞ்சிக்கிட்டு இருக்கேன். லாக்டெளன் முடிஞ்சவுடனே நேர்ல பார்க்குறேன்னு சொல்லியிருக்கார்” என்ற லிடியனிடம் ஜிப்ரான் இசையில் `அன்பும் அறிவும்’ ஆல்பத்துல வேலைபார்த்த அனுபவம் பற்றி கேட்டேன்.
“நிறைய லெஜெண்ட்ஸ் இந்த ஆல்பத்துல பாடியிருந்தாங்க. இதுல நானும் ஒருத்தனா இருந்ததுல ரொம்ப ஹேப்பி. இந்த ஆல்பம் ரெடியாகுறதுக்கு முன்னாடி கமல் சார்கிட்ட இருந்து போன் வந்தது. அவர் சில விஷயங்கள் சொன்னார். அவர் சொன்ன மாதிரிதான் பண்ணேன்.
நல்லா வந்திருந்தது. ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் ஆல்பத்துல எனக்குனு சில ஸ்பேஸ் கொடுத்ததுக்கு நன்றி சொல்லணும்” என்றான் லிடியன்.