கொரோனா வைரஸ் குடும்பத்தின்  கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் 422 கடற்படை வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ள  நிலையில், மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 856 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இன்று இரவு 8.30 மணியுடன் நிறைவடைந்த 12 மணி நேரத்தில் 6 கடற்படை வீரர்கள் உட்பட 9 பேர் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது  தெரியவந்த நிலையிலேயே இந்த எண்ணிக்கை  இவ்வாறு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த அதிகளவான தொற்றாளர்கள் இன்று பூரண குணமடைந்து வீடு திரும்பியிருந்தன. இன்று மட்டும் இவ்வாறு 61 தொற்றாளர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். அதன்படி 321 தொற்றாளர்கள் இதுவரை பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன் மேலும் 526 தொற்றாளர்கள் தொடர்ந்தும் அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை, வெலிகந்த, முல்லேரியா ஆதார வைத்தியசாலைகள், காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, மினுவங்கொடை வைத்தியசாலை, கடற்படை வைத்தியசாலை  மற்றும் சிலாபம் – இரணவில் வைத்தியசாலை, ஹோமாகம ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அத்துடன் மேலும் 116 பேர் கொரோனா சந்தேகத்தில் 29 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொழும்பில் இதுவரை 150 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், கொழும்பு நகருக்குள் மிக செறிவாக மக்கள் வாழும் பகுதிகளில் தொடர்மாடி குடியிருப்புக்கள், தோட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று குறித்த பி.சி.ஆர். பரிசோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இன்று கண்டறியப்பட்ட 9 தொற்றாளர்களில் கடற்படை வீரர்களுக்கு மேலதிகமாக டுபாயில் இருந்த வந்த தனிமைப்படுத்தப்பட்டுள்ள இருவரும் உள்ளடங்குகின்றனர். டுபாயில் இருந்து வருகை தந்த ஒருவருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது, அவருக்கு கொரோனா  தொற்று ஏற்பட்டுள்ளமை கடந்த 7 ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டுபாயிலிருந்து யூ.எல்.  303 விமானத்தினூடாக  197 பேர் நாட்டை வந்தடைந்தனர்.

டுபாயிலிருந்த இலங்கையை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் அங்கு வசித்து வந்த சிலரும் இதில் அடங்குகின்றனர். அவர்கள் விமான நிலையத்தை வந்தடைந்ததும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவர்களுக்கான ஆரம்பக்கட்ட உடல் உஷ்ணத்தை அளவிடும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது அந்நபருக்கு காய்ச்சல் நிலைமை உள்ளமை தெரியவரவே, குறித்த நோயாளி நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார். அங்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் கொரோனா தொற்று உறுதியானது. அந்த விமானத்தில் வந்த ஏனையோர் தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ள நிலையில் இன்று அவர்களில் இருவருக்கே கொரோனா இருப்பது உறுதியானது.

Share.
Leave A Reply