தேங்காய்கள் பறிப்பதற்காக தென்னை மரத்தில் ஏறியவர், பிடி சறுகியதால் தவறி விழுந்து மரணமடைந்துள்ளாரென, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர், சதாம்ஹுஸைன் கிராமத்தில் நேற்று (10) பிற்பகல் இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த ஆதம்லெப்பை லாபீர் (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இவர், கூலிக்கு தேங்காய் பறிப்பதற்காக உயரமான தென்னை மரத்தில் ஏறியபோது மர உச்சியிலிருந்து பிடி சறுக்கி கீழே விழுந்துள்ளார்.
இவரின் சத்தம் கேட்டு உதவிக்கு விரைந்தவர்கள், உடனடியாக அவசர அம்பியூலன்ஸ் சேவை 1990க்கு அழைப்பித்து, முதலுதவிச் சிகிச்சை அளித்து பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்ட போதும் சிகிச்சை பயனின்றி, அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.