சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் 41,37,591 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், பலியானவர்களின் எண்ணிக்கை 283,526 ஆக உள்ளது, 14,242,30 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 79,607 பேரும், பிரிட்டனில் 32,140 பேரும் பலியாகி உள்ளனர் என்று ஜான்ஸ் ஹாஃப்கின்ஸ் பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4213 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 1559 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர் என்றும் இந்திய சுகாதார துறையின் இணை செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இதுவரை 67,152 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 44,029 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. 20,917 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர் என்கிறார் அவர். இந்தியாவில் குணமடைபவர்களின் விகிதம் 31.15% என்ற அளவில் இருப்பதாக தெரிவிக்கிறார்.
தமிழகத்தில் புதிதாக 798 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதியாகியுள்ளதால், தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8002ஆக உயர்ந்துள்ளது.இன்று 789 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்ட நிலையில், அதில் 538 நபர்கள் சென்னையில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துவருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இலங்கையில் படிப்படியாக ஊரடங்கு உத்தரவை தளர்த்தும் நடவடிக்கையை இலங்கை அரசு இன்று (மே 11) தொடங்கியுள்ளது
கோவிட் -19 வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு இடைக்கிடை தளர்த்தப்பட்டாலும், ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து அமலில் வைக்க இலங்கை அரசு இதுவரை நடவடிக்கை எடுத்து வந்திருந்தது. குறிப்பாக கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து ஒன்றரை மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்தது.
இந்த நிலையில், இலங்கையின் கொரோனா அதிக அச்சுறுத்தல் மிக்க பகுதிகளான கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இன்று முதல் தளர்த்தப்பட்டது..
மலேசியாவில் இன்று ஒரே நாளில் 70 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 6,726 ஆக அதிகரித்துள்ளது.
சிங்கப்பூரில் மேலும் 486 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,882 ஆகியுள்ளது.இன்று அடையாளம் காணப்பட்ட கோவிட் 19 நோயாளிகளில் இருவர் மட்டுமே சிங்கப்பூர் குடிமக்கள் ஆவர். இதன் மூலம் வைரஸ் தொற்றியோரில் 90 விழுக்காட்டினர் அந்நியத் தொழிலாளர்கள் எனத் தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக வியட்நாமில் அமல்படுத்தப்பட்டிருந்த முடக்க நிலையில் புதிய தளர்வுகள் இன்று அமலுக்கு வந்தன. அந்த வகையில், இன்று முதல் சமூக விலகல் கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள், கடைகள், அலுவலகங்கள், பொதுப் போக்குவரத்து மற்றும் அத்தியாவசியமற்ற சேவைகளும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வியட்நாம் தலைநகர் ஹனோயில் மக்கள் வழக்கம்போல் வீடுகளை விட்டு வெளியே செல்ல தொடங்கியதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அது போல ஆஸ்திரேலியாவிலும் சமூக முடக்கம் தளர்த்தப்பட்டதை அடுத்து பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வணிக வளாகங்களில் திரண்டுள்ளனர். சமூக இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்காமல் இருப்பது அங்கு கவலையை எழுப்பி உள்ளது.