முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு இன்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் செம்மணி பகுதியில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
நிகழ்வு ஆரம்பமாகவிருந்த வேளை அப்பகுதிக்கு வந்திருந்த , யாழ்ப்பாண பொலிஸார் நிகழ்வினை நடாத்த விடாது தடைகளை ஏற்படுத்தும் முகமாக அஞ்சலி நிகழ்வுக்கு வந்திருந்தவர்களை அப்புறப்படுத்த முனைந்தனர்.
அதன் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம், ”நாம் சுகாதார நடைமுறைகளை பின்பற்றியே நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளோம்” என கூறி நிகழ்வினை ஆரம்பிக்க முயற்சிக்கப்பட்டது.
அவ்விடத்திற்கு மூன்று மோட்டார் சைக்கிளில் ஆறு இராணுவத்தினர், நிகழ்விடத்தில் பொலிஸாருக்கு பாதுகாப்பு வழங்கும் விதமாக வந்திருந்தனர்.
பொலிஸாரின் தடைகளை மீறி நிகழ்வுகளை நடாத்த முற்பட்ட போது, நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் வீடுகளில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கடுமையாக எச்சரிக்கப்பட்டது.
எனினும், சுகாதார அறிவுறுத்தலுக்கு அமைய சமூக இடைவெளியை பேணி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி நிகழ்வுகள் முடிவடைந்ததும், நிகழ்வில் கலந்து கொண்டவர்களை பொலிஸார் தனித்தனியாக படம் எடுத்து அவர்களின் விவரங்களையும் பதிவு செய்தனர்