மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சிக்கு மத்தியிலும், களுவாஞ்சிகுடி மாணிக்கப் பிள்ளையார் கோவில் கிணற்று நீர் நிரம்பி வழிந்தோடும் அதிசயத்தைப் பார்வையிட பெருமளவில் பொதுமக்கள், இன்று (13) படையெடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்கே உள்ள களுவாஞ்சிக்குடி மாணிக்கப்பிள்ளையார் கோவில் வளாகத்திலுள்ள கிணற்றில், இன்று காலை 06 மணியளவில் நீர் நிறைந்து வழிந்துள்ளமையை பக்தர்கள் அவதானித்துள்ளனர்.
இந்தச் செய்தி, அப்பகுதியில் பரவியதைத் தொடர்ந்து அதனைப் பார்வையிடக் குவிந்த பொதுமக்களை விலக்க பொலிஸார் கடும் பிரயத்தம் மேற்கொண்டுள்ளனர். மேலும், விசேட அதிரடிப் படையினரும் அங்கு வரவழைக்கப்பட்டனர்.
கிணற்றின் அருகில் சென்று பார்வையிட்டுள்ள பொதுமக்கள், கடவுளின் அதிசயம் என நினைத்து, நிரம்பி வழிந்த கிணற்று நீரைப் பாத்திரம் கொண்டு அள்ளி எடுத்துச் சென்றுள்ளார்கள். எனினும், நீர் கிணற்றின் உயர்மட்டம் வரை நிரம்பிக் காணப்படுகின்றது.
இந்தக் கிணற்றில் இருந்துதான் மேற்குப் பக்கமாக உள்ள களுவாஞ்சிகுடி கண்ணகி அம்மன் கோவில் கிரியைகளுக்கான நீர் குழாய் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. வைகாசி மாதத்தில், கண்ணகி கோவில் திருச்சடங்கு ஆரம்பமாவதாகவும், எனும், தற்போது கொரோனா தாக்கத்தால் கண்ணகியம்மன் சடங்கு நடைபெறவில்லை என்பதை, கண்ணகி அம்பாளின் அதிசயமாக இருப்பதாகவும் பக்தர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இதேவேளை, அப்பகுதியில் தொடர்ந்தும் பொதுமக்கள் ஒன்றுகூடுவதை பொலிஸார் தடுத்து வருவதுடன், கிணற்று நீரை பகுப்பாய்வு செய்வதற்கு சுகாதாரத் துறையினர், நீரை எடுத்துச் சென்றுள்ளனர்.