இலங்கையில் நேற்றிரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு சட்டம் நாளை அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படும் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கு மீள் அறிவித்தல் விடுக்கப்படும் வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய 23 மாவட்டங்களுக்கும் எதிர்வரும் 23ஆம் தேதி வரை இரவு 8 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை நாளாந்தம் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் இன்னும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை என்பதனாலேயே இந்த ஊரடங்கு அவ்வப்போது பிறப்பிக்கப்படுகிறது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் சந்தர்ப்பத்திலேயே கொரோனா தொற்று பரவும் அபாயம் அதிகரித்து காணப்படுகிறது” என்று பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
அதனாலேயே இலங்கையில் வார இறுதி நாளிலும், நாளாந்தம் இரவு முதல் அதிகாலை வரையும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
மக்களின் இயல்வு வாழ்க்கையை வழமைக்கு கொண்டு வருதல் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே ஊரடங்கு தளர்த்தப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளில் ஊரடங்கு தொடர்ந்தும் அமலில் இருந்தாலும், அத்தியாவசிய சேவைகளுக்காக அந்த பகுதிகளும் திறக்கப்பட்டுள்ளன.