கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில் இதுவரை 46 லட்சத்து 26ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவு தெரிவிக்கிறது. கோவிட்-19 நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு நான்காவது முறையாக மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதற்கான வழிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அடுத்த சுமார் 2 வாரங்களுக்கு இந்தியாவில் எதற்கெல்லாம் அனுமதி, எதற்கெல்லாம் தடை நீட்டிக்கப்படுகிறது என்பதை தற்போது பார்க்கலாம்.

  • பலரும் எதிர்பார்த்திருந்த விமான போக்குவரத்திற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 31ஆம் தேதி வரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் எதுவும் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மெட்ரோ ரயில் சேவைகளும் இயங்காது.
  • பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
  • தற்போது போலவே உணவகங்கள் ஆன்லைன் டெலிவரி சேவைகளை தொடரலாம்.
  • சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், ஜிம்கள், நீச்சல் குளங்கள், பூங்காக்கள், பார்கள் திறக்கப்படாது.
  • விளையாட்டு அரங்கங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • சமூக, அரசியல், விளையாட்டு மற்றும் மதக்கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.
  • வழிபாட்டுத் தலங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
  • ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி.
  • சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படாத, அதாவது ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் இருந்து மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து, தனிப்போக்குவரத்து இயக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
  • இதற்கு அந்த குறிப்பிட்ட இரண்டு மாநிலங்களும் சேர்ந்து முடிவெடுத்துக் கொள்ளலாம்.

சிவப்பு மண்டலத்திற்கான வழிமுறைகள்

  • சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் மண்டலங்களில் அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
  • இந்தப் பகுதிகளில் இருக்கும் யாரும் வெளியே பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் சிவப்புப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தீவிர பரிசோதனை செய்யப்படலாம். வீடு வீடாக சென்று கொரோனா தொற்றாளர்கள் இருக்கிறார்களா என கண்காணிக்கலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
  • அத்தியாவசிய பொருட்கள் வாங்கப்போவதை தவிர, மாலை 7 மணியில் இருந்து, காலை 7 மணி வரை மக்கள் யாரும் நடமாடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
  • இந்த வழிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

 

Share.
Leave A Reply