பிரிட்டனில் இருந்து வெளிவரும் ‘த கார்டியன்’ பத்திரிகையில் வெளியான தகவல் ஒன்றினால் இலங்கையில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
அந்தப் பத்திரிகையில் வெளியாகியுள்ள ‘உங்கள் தீவுகளை உங்களுக்குத் தெரியுமா, மேன் ஃப்ரைடே?’ என்ற சுற்றுலா வினா விடைப் போட்டி (“Travel quiz: do you know your islands, Man Friday?”) மூலமாகவே இந்த சர்ச்சை வெடித்துள்ளது
இந்த போட்டியில் இலங்கை தொடர்பில் எழுப்பப்பட்ட வினா ஒன்றினால் இந்த சர்ச்சை தோன்றியுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.
இந்த போட்டியின் இரண்டாவது வினாவானது, ஈழம் என்பது எந்த பிரபலமான விடுமுறைத் தீவின் பூர்வீக பெயர்? என வினவப்பட்டுள்ளது.
இந்த வினாவிற்கான தெரிவு செய்யப்பட வேண்டிய விடைகளில் இலங்கையும் இடம் பெற்றுள்ளதே இந்த சர்ச்சைக்கான காரணம் என வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுகின்றது.
எவரேனும் ஒருவர் சரியான பதிலாக இலங்கையை குறிப்பிடும் பட்சத்தில், அதில் இந்த தீவின் அண்மைய இராணுவக் கிளர்ச்சியை நடத்திய அமைப்பின் முழுப் பெயர் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற மேலதிக விளக்கம் வெளியிடப்பட்டதாகவும் வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றில் தெரிவிக்கிறது.
இந்த தகவலின் தவறான தன்மை காரணமாக அதனை நீக்குமாறு ‘த கார்டியன்’ பத்திரிகைக்கு அந்த நாட்டுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் கடிதமொன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த கடிதத்தின் மூலம் இலங்கை அரசாங்கம் பல்வேறு விடயங்களை ‘த கார்டியன்’ நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது ஒரு பயங்கரவாத அமைப்பு எனவும், அதில் சிறுவர் போராளிகள் இடம் பெற்றிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், அந்த அமைப்பினால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதாகவும் பிரிட்டினுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராலயம் பத்திரிகை நிறுவனத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரிட்டன், அமெரிக்கா, பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளிட்ட 32 நாடுகளால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டதாகவும் அந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளது.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்கும் வகையில் 1976 ஆம் ஆண்டு உருவான இந்த அமைப்பின் சித்தாந்தம் ஈழம் என குறிப்பிடுகிறது என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈழம் என்ற பெயர் ஒருபோதும் இலங்கையின் பூர்வீகப் பெயராகப் பயன்படுத்தப்படவில்லை என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே தி கார்டியன் பத்திரிகை, இலங்கை தீவு தொடர்பான அந்தக் கேள்வியை தமது இணையப் பக்கத்தில் இருந்து அகற்றிவிட்டது.
“சிலோன் என்று அழைக்கப்படுவதற்கு முன்னரே ஈழம் என்று இலங்கை அழைக்கப்பட்டது”
இலங்கை அல்லது சிலோன் என்று அழைக்கப்படுவதற்கு முன்னர் ஈழம் என்றே இலங்கை அழைக்கப்பட்டதாக தொல்லியல் பேராசிரியரும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியருமான பீ.புஸ்பரட்ணம் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
பட்டினப்பாலை, சோழர் கல்வெட்டுக்கள், இராஜராஜ சோழம் போன்ற வரலாற்று இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுக்களில் ஈழம் தொடர்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை ஈழம் என்று அழைக்கப்பட்டமைக்கான பல்வேறு சான்றுகள் இன்றும் உள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
ஈழம் என்ற பெயரை இந்த அரசாங்கம் பயன்படுத்தவில்லை என்பதற்காக, முன்னர் பயன்படுத்தியதை இல்லை என அரசாங்கத்தால் கூற முடியாது என பேராசிரியர் தெரிவிக்கின்றார்.
இலங்கை அரசாங்கம் ஈழம் என்று சொல்ல முடியாது என்பது வேறு என கூறும் அவர், ஈழம் என்று சொல்லப்பட்டதை இல்லை என கூறுவதும் தவறு என்றும் குறிப்பிடுகிறார்.
சங்க காலத்திலிருந்து இலங்கை ஈழம் என்று அழைக்கப்பட்டமைக்கான பல்வேறு சான்றுகள் காணப்படுவதாகவும் பேராசிரியர் புஸ்பரட்ணம் குறிப்பிடுகிறார்.