கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் 545  கடற்படை வீரர்களும், கடற்படை வீரர்களின் உறவினர்கள் 37 பேரும்  பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 986 ஆக உயர்ந்துள்ளது.

இந்த 986 தொற்றாளர்களில் 557 பேர் முப்படைகளைச் சேர்ந்தவர்களாவர். இன்றிரவு 7.30 மணியுடன் நிறைவடைந்த 12 மணி நேரத்தில் 5 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து இந்த எண்ணிக்கை இவ்வாறு உயர்ந்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட ஐவரும்  கடற்படையினர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

 

இந்நிலையில் இன்று மட்டும் 21 தொற்றாளர்கள் பூரண குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அதன்படி இதுவரை 559 தொற்றாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். அவர்களில் 204 பேர் கடற்படை வீரர்கள் என கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுரு சூரிய பண்டார கூறினார்.

இந்நிலையில் இலங்கையில் இதுவரை கொரோனாவால் 9 மரணங்கள் பதிவாகியுள்ளன. 418 தொற்றாளர்கள் தொடர்ந்தும் அங்கொடை தேசிய தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலை, வெலிகந்த, முல்லேரியா ஆதார வைத்தியசாலைகள், காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, மினுவங்கொடை வைத்தியசாலை, கடற்படை வைத்தியசாலை  மற்றும் சிலாபம் – இரணவில் வைத்தியசாலை, ஹோமாகம ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அத்துடன் மேலும் 149  பேர் கொரோனா சந்தேகத்தில் 29 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply