விடுதலைப் புலிகளின்தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் 11 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை ஆயுதப் படைகளுடன் போராடி 19 மே 2009 அன்று கொல்லப்பட்டார்.

வடஇலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் நந்திக்கடல் கரையில் புலிகள் இராணுவரீதியாக தோல்விகண்டதையடுத்து தெற்காசியாவின் மிக நீண்ட யுத்தம் முடிவுக்கு வந்தது.

பிரபாகரன் இல்லை என்றாலும், புலிகள் நடத்திய நீண்ட யுத்தத்தின் அழிவுகளிலிருந்து இலங்கை தமிழ் மக்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை.

கோவீட் -19தொற்றுநோய் மற்றும் நிலுவையாக இருந்துவரும் அரசியலமைப்பு நெருக்கடி பற்றிய செய்திகளால் இலங்கை ஊடகங்கள் கவனத்தை குவித்திருக்கும் ஒரு காலகட்டத்தில் பல ஆண்டுகளாக தீவு தேசத்தின் அரசியல்-இராணுவ போக்கை நிர்ணயித்தஒரு மனிதனின் வாழ்க்கை மற்றும் காலகட்டத்தை இந்த கட்டுரை மையமாகக் கொண்டுள்ளது. .

குடும்பம் மற்றும் குழந்தைப் பருவம்

திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன் 1954 நவம்பர் 26 இல் பிறந்தார். குடும்பத்தில் இரண்டு ஆண் பிள்ளைகளும் இரண்டு பெண்பிள்ளைகளும்.

அவர் நான்கு குழந்தைகளில் இளையவர் என்பதால், பிரபாகரனின் செல்லப் பெயர் “தம்பி” ஆனது. அந்த செல்லப் பெயர் “தம்பி” அவரது வாழ்நாள் முழுவதும் ஒட்டிக்கொண்டது.

பிரபாகரனின் தந்தை வீராசாமி திருவேங்கடம் வேலுப்பிள்ளை . பிரபாகரனின் தாயின் பெயர் பார்வதிபிள்ளை. அவரது இயற்பெயரும் வேலுப்பிள்ளை .அவர்களிருவரும் இயற்கையாக மரணமடைந்துவிட்டனர்.

பிரபாகரனின் குடும்பம் வடக்கு கடலோர நகரமான வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்தது. பொதுவாக வி.வி.டி என்று அது குறிப்பிடப்படுகிறது.

அவர்கள் “திருமேனி குடும்பம்” அல்லது திருமேனி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று அறியப்பட்டனர். பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை .அரசாங்க எழுதுவினைஞர் சேவையில் சேர்ந்தார்.

இறுதியில் மாவட்ட நில அதிகாரியாக ஆனார். மறைந்த காமினி திசாநாயக்க காணி அமைச்சராக இருந்தபோது அவர் அரசாங்க சேவையில் இருந்து ஓய்வு பெற்றார் என்று நினைக்கிறேன்.

பிரபாகரனின் தந்தை தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்டதால் யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மட்டக்களப்பு என வெவ்வேறு பாடசாலைகளில் அவர் கல்வி பயின்றார்.

அவர் ஒரு முன்னுதாரணமான மாணவர் அல்ல. மேலும் அவர் க.பொ.த சாதாரணதரத்தில் கூட தேர்ச்சி பெறவில்லை.

இது அவர் புத்திசாலித்தனம் இல்லாதவர் என்றோ அல்லது அறிவுத்தேடலை கொண்டிருக்கவில்லையென்றோ அர்த்தப்படுத்த வில்லை.

முறையான கல்வியைக் காட்டிலும் பிற விட யங்களில் பிரபாகரன் அதிக அக்கறை காட்டியதே இதற்கு காரணம். தெளிவான ஞாபக சக்தியும் ஆர்வமும் கொண்ட வாசகர்.

இளம் பிரபாகரன் தெளிவான ஞாபக சக்தியும் ஆர்வமும் கொண்ட வாசகர்.வரலாற்றுப் போர்கள் மற்றும் வரலாற்று பிரபலமானவர்கள் பற்றி – வரலாற்றைப் படிப்பதில் அவர் மிகவும் விருப்பம் கொண்டவர்.

இந்திய சுதந்திரப் போராட்டம் அவரைக் கவர்ந்தது. அவர் தனது இளம் வயதிலேயே மகாத்மா காந்தியின் சுயசரிதை நூலான ‘சத்தியசோதனை ’ தமிழ் பதிப்பைப் படித்திருந்தார் . ஆனால் அதிலும் அகிம்சைகொள்கையிலும் அவர் அதிகளவு ஈர்க்கப்படவில்லை.

பிரபாகரன் சிறந்த தலைவராக வரித்துக்கொண்டவர் நேதாஜி என்று அழைக்கப்படும் சுபாஷ் சந்திரபோஸ் ஆவார்.

ஒரு கட்டத்தில் நேதாஜி ,காந்தியின் “அகிம்சை” யை மறுத்து, ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தைத் தொடங்க இந்திய தேசிய இராணுவத்தை (ஐ.என்.ஏ) உருவாக்கினார்.

நேதாஜியின் புகழ்மிக்க அறிவிப்பு: “எனது கடைசி சொட்டு இரத்தம் சிந்தும் வரை எனது மண்ணின் சுதந்திரத்திற்காக போராடுவேன்.” என்பதாகும். இந்த உணர்வுகளுக்கு பிரபாகரன் முழு மனதுடன் இடமளித்திருந்தார்.

பலருக்கு நம்புவது கடினம்,ஆனால் பிரபாகரனிடமும் ஒரு அமைதியான, ஆன்மீக அம்சம் இருந்தது. “இதிஹாசமான ” ‘மகாபாரதம்’ அவரை கவர்ந்தது. அவர் அடையாளம் காட்டிய கதாபாத்திரங்கள் பீமன் மற்றும் கர்ணன் ஆகியோராகும் .

‘குருஷேத்ரா’போர்க்களத்தில் அலைந்து திரிந்த அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் அறிவுரை வழங்கிய கதையை விவரிக்கும் ‘மகாபாரதம்’ இது.

பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் (ஒன்றுவிட்ட சகோதரர்கள் ) போர் செய்ய கூடியிருந்தனர். ஆனால் அர்ஜுனன் தனது உறவினர்களுக்கு எதிராகப் போராடத் தயங்கி. தனது வில்லான ‘காண்டீபத்தை ’ நழுவ விடுகிறார்.

ஒவ்வொரு நபரும் தனது கடமையை நிறைவேற்ற விதிக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணர் அவருக்கு அறிவுரை கூறுகிறார்.

உறவை பொருட்படுத்தாமல் தனது எதிரியைக் கொல்வது போர்வீரனின் கடமையாகும். எதிரியின் “உடலை” கொல்வது வீரத்தின் ஒரு பகுதி என்பது பகவான் கிருஷ்ணரின் கீதாதோபதேசத்தின் சாராம்சம். பிரபாகரனை ‘கீதையில்’ கூறப்பட்ட கொள்கைகள் பெரிதும் கவர்ந்திருந்தது.

‘மகாபாரதத்தை’ அடிப்படையாகக் கொண்ட ‘கர்ணன்’ என்ற தமிழ் படத்தில் கிருஷ்ணராக நடித்தவர் என்.டி. ராம ராவ். முத்துராமன் அர்ச்சுனனாக நடித்திருந்தார்.

கீதையின் கிளைக்கதை ”மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா’‘ பாடலாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இது பிரபாகரனின் விருப்பமான பாடல்களில் ஒன்றாகும். இதை சீர்காழி கோவிந்தராஜன் பாடியுள்ளார்.

கீதையின் தத்துவத்தை மிக ஆழமாக பிரபாகரன் மனதில் பதித்திருந்தார் என்ற அப்பிராயத்தை தெரிவித்த ஒருவர் இலங்கையின் முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் ஜிதேந்திரநாத் தீட்சித் ஆவார்.

விடுதலைப்புலிகள் இந்திய இராணுவத்துடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த காலத்தில் இது நடந்தது. இதைச் சொன்னபோது தீட்சித் அதை ஒரு “பாராட்டாக” குறிப்பிடுவதை என்னால் காண முடிந்தது.

அனைத்து உயர்மட்ட தமிழ் போராளித் தலைவர்களிடமும் பிரபாகரன் மட்டுமே கிளர்ந்தெழும் தன்மையை கொண்டிருந்தார் என்று முந்தைய சந்தர்ப்பத்தில் தீட்சித் என்னிடம் கூறியிருந்தார்.

புளொட்- உமாமகேஸ்வரன் ,டெலோ – சிறி சபாரத்தினம் ,ஈ .பி .ஆர் . எல் . எப் -பத்மநாபா, ஈரோஸ் – பாலகுமார், விடுதலைப்புலிகள்- பிரபாகரன் ஆகிய ஐந்து உயர்மட்ட போராளிகள் குழுக்களின் தலைவர்களையும் சந்தித்தபின்னரே தீக் ஷித் இதனை கூறியிருந்தார்.

1985 ஆம் ஆண்டின் முற்பகுதியில் முன்னாள் தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலியுடனான உரையாடலையும் நினைவு கூர்கிறேன்.

1987 ஆம் ஆண்டு இலங்கை- இந்திய உடன்படிக்கைக்கு நீண்ட காலத்திற்கு முன்பே அனைத்து தமிழ் குழுக்களும் போராட்டத்தை கைவிட்டு விடுவார்கள் என்றுஅத்துலத்முதலி எதிர்வுகூறியிருந்தார். ஆனால் பிரபாகரன் அல்ல எனவும் அப்போது லலித் கூறினார்.

“அவர் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டார், கடைசிவரை போராடுவார்” என்று அவர் கூறியிருந்தார். எவ்வளவு உண்மை!

பிரபாகரன் தமிழ் நாவல்களைப் படிக்க குறிப்பாக வரலாற்று பின்னணி கொண்டவற்றை படிக்க விரும்பினார்.

அவருக்குப் பிடித்த வரலாற்று நாவல் ‘பொன்னியின் செல்வன்’, ‘கல்கி’ (ஆர். கிருஷ்ணமூர்த்தி) இன் மகத்தான படைப்பு. அகிலன் மற்றும் சாண்டிலியன் ஆகியோரின் வரலாற்று நாவல்களும் அவருக்குப் பிடித்திருந்தன.

விடுதலைப்புலிகள் தமது முதல் கப்பலை வாங்கியபோது, சாண்டிலியன் எழுதிய நாவலுக்குப் பிறகு அதற்கு கடல்புறா என்று பெயரிடப்பட்டது.

ஆனால் ர.சு.நல்லபெருமாள் எழுதிய ‘கல்லுக்குள் ஈரம்’ நாவல் பிரபாகரனால் திரும்ப திரும்ப பலமுறை வாசிக்கப்பட்டிருந்தது.

இது ஆங்கிலேயருக்கு எதிரான இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியை கொண்டதாகும். பிரதான கதாநாயகன் ரங்கமணி காந்தியின் “அஹிம்சை ” போராட்ட முறையை நம்பாதவர் மற்றும் இந்தியாவை விடுவிப்பதற்கான பொருத்தமான முறையாக வன்முறையை ஆதரிக்கிறார்.

பிரபாகரன் இந்த நாவலை நேசித்ததில் ஆச்சரியமில்லை. ஆனால் இறுதியில் இதய மாற்றம் உள்ளது, ஆனால் நிஜ வாழ்க்கை கதாநாயகனுக்கு கல்லில் ஈரப்பதன் இல்லை.

சமகால விவகாரங்கள் மற்றும் சர்வதேச அரசியலில் பிரபாகரன் மிகவும் ஆர்வமாக இருந்தார். பிரபாகரனின் படைக்கல முன்னாள் தோழர் தளையசிங்கம் சிவகுமார் அல்லது அன்டன் மாஸ்டர் அந்த நாட்களில் விடுதலைப்புலிகள் எவ்வாறு ‘டைம்’ மற்றும் ‘நியூஸ் வீக்’ சஞ்சிகைகளுக்கு சந்தா செலுத்தினர் என்பது பற்றி என்னிடம் கூறினார். கட்டுரைகளை மொழிபெயர்க்கவும் விளக்கவும் பிரபா ஆங்கிலத்தில் அறிவுள்ள நண்பர்களைக் கேட்பார்.

விடுதலைப்புலிகள் முழுமையான அமைப்பாக வளர்ச்சியடைந்திருந்த பிற்காலங்களில் பிரபாகரனுக்காக பத்திரிகைகள் மற்றும் முக்கியமான கட்டுரைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. இராணுவ விவகாரங்கள் மற்றும் போர் பற்றிய பல புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன.

பிள்ளைப்பராய நாட்டங்கள்

ஒரு பள்ளி மாணவனாக, பிரபாகரன் தனது பராய பெரும்பாலான இளைஞர்களைப் போலவே சைக்கிள் ஓடுதல் மற்றும் கரப் பந்து மற்றும் கால்பந்து விளையாடுவதை விரும்பினார்.

ஆனால் அவர் எந்த விளையாட்டு வீரராகவும் இல்லை. அதிரடி படங்களை பார்க்க விரும்பினார். கிளின்ட் ஈஸ்ட்வுட் திரைப்படங்களிலிருந்து தனது சண்டை நுட்பங்களை கற்றுக்கொண்டதாக ஒரு அமெரிக்க பத்திரிகையாளரிடம் கூறியதற்காக அவர் அடிக்கடி கேலி செய்யப்படுகிறார்.

ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்றால், அவர் கியூபாவில் பயிற்சி பெற்றாரா என்று அமெரிக்க எழுத்தாளர் அவரிடம் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு ஈஸ்ட்வுட் டைமேற்கோள் காட்டி பிரபாகரன் பதிலளித்தது நகைச்சுவையாக இருந்தது.

சிறுவயதில் அவருக்கிருந்த மற்றொரு நாட்டம் அணில், பல்லி,அறனை பச்சோந்திகள் மற்றும் சிறிய பறவைகளை ஒரு கவண் கொண்டு குறிவைப்பதாகும்.

அவரது நினைவாற்றல் வியப்புணர்வை ஏற்படுத்துவதாகும். பல வருடங்களுக்கு முன்பு கடைசியாக யாரையாவது பார்த்தமுகங்களும் பெயர்களும் நேரமும் பிரபாகரன் நினைவில் வைத்து இருப்பார்.

அவரது கண்கள் எப்பொழுதும் கூர்மையாகவும் சுற்றி சுழன்றவாறும் எப்போதும் எச்சரிக்கையாகவும் இருந்தன. அவரது கண்கள் பெரியதாகவும், கூர்மையாகவும் இருந்தன. மேலும் அவை “முழி யன்” என்று கிண்டல் செய்யப்பட்டது .

ஒழுக்கத்தை இறுக்கமாக கடைப்பிடிப்பவர்

பிரபாகரனும் பல வழிகளில் ஒரு “கடும்கண்டிப்பாளர் ” ஆவார். இயக்கத்தின் ஆரம்ப நாட்களில் அவர் குடிப்பழக்கம் அல்லது , புகைத்தல் என்பனவுக்கு எதிராக மற்றும் பாலியல் தவிர்ப்பு போன்றவற்றை பின்பற்றுமாறு அறிவுறுத்தியிருந்தார் .

ஒழுங்கு மற்றும் தூய்மை கிட்டத்தட்ட ஒரு ஆவேசமாக இருந்தது. அவர் ஒழுக்கத்திற்கு கடும் கண்டிப்பானவராக இருந்தார்.

அவர் எப்போதும் “நீள சட்டைகள்” மற்றும் கட்டைக்கை சட்டைகளை விரும்புவார். மறைக்கப்பட்ட துப்பாக்கிகளை மூடி வைத்திருப்பதற்கு நீள சட்டை உதவியாக இருந்தது. போராட்டத்தின் ஆரம்ப கட்டங்களில் கடுமையான நிதி பற்றாக்குறை இருந்தபோது, பிரபாகரன் தனது சில துணிகளை தவறாமல் கழுவி சலவை செய்வார். எப்போதும் மிடுக்கான தோற்றத்தை பேணுவார் என்று என்று கூறப்படுகிறது.

அவர் ஒரு நல்ல சமையல்காரர் மற்றும் நல்ல உணவை விரும்பினார். அவர் சீன உணவு வகைகளை விரும்புபவர்.

பிரபாகரன் பிட்டு, தேங்காய் சம்பல் மற்றும் பொரித்த இறால் போன்றவையும் அவருக்கு பிடிக்கும். உடும்பு மற்றும் ஆமை இறைச்சியை அவர் விரும்பினார். பழங்கள் மற்றும் இயற்கை தேனையு ம் அவருக்கு விருப்பம்.

வழக்கமாக விடுதலை புலி உறுப்பினர்களுக்கு தண்டனையின் கீழ் சமையலறையில் கடமைகள் ஒதுக்கப்படுகின்றன. “ஒரு நல்ல சமையல்காரர் மட்டுமே ஒரு நல்ல கெரில்லாவாக இருக்க முடியும்” என்று பிரபாகரன் கேடர்களை சமைக்க ஊக்குவிப்பார்.

அவர் வீட்டில் இருக்கும்போது சமையலறையில் அடிக்கடி சமைப்பார் அல்லது உதவுவார். ஒருமுறை அவரைச் சந்தித்த ஒரு நெருங்கிய உறவினர், அஞ்சப்பட்ட கெரில்லா தலைவர் சமையலறையில் தேங்காய்களை பரபரப்பாக துருவுவதை கண்டு குழப்பமடைந்து உள்ளார்.

அரசியல் உந்துதல்

வல்வெட்டித்துறையில் பிரபாகரன் முந்தைய நூற்றாண்டின் அறுபதுகளின் பிற்பகுதியிலும் எழுபதுகளின் ஆரம்பத்திலும் அரசியல் உந்துதல் பெற்றார்.

முன்னாள் ஊர்காவற்றுறை எம்.பி. வ. நவரத்தினம் தமிழரசுக்கட்சியிலிருந்து வெளியேறிய காலகட்டத்தில் இது நிகழ்ந்திருந்தது.

ஒரு காலத்தில் தமிழரசுக்கட்சியின் “தங்க மூளை” என்று வர்ணிக்கப்பட்ட நவரத்னம், 1968 ஆம் ஆண்டில் “தமிழர் சுயாட் சி கழகம்” அல்லது தமிழ் சுய-ஆட்சி கட்சியை உருவாக்கினார் .

நவரத்னம் கூட்டாட்சி கோரிக்கையை கைவிட்டு அதற்கு பதிலாக “சுயாட் சி ” அல்லது “சுய-ஆட்சி” கோரிக்கையை முன்வைத்தி ருந்தார். சுயாட்சி என்பது ஒரு தனிஅரசுக்கான தன்மையை கொண்டதாகும் .

வேணுகோபால் மாஸ்டர் என்ற ஒரு கல்வியாளர் இருந்தார். அவர் மீது பிரபாகரனுக்கு மிகுந்த மரியாதையும் அன்பும் இருந்தது.

வேணுகோபால் மாஸ்டர் நவரத்தினத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தவர்.பிரபாகரன் உட்பட பல மாணவர்கள் அவரைப் பின்பற்றுபவர்களாக மாறி, தமிழ் சுயராஜ்யத்தின் தீவிர விசுவாசிகளாக மாறினர்.

சுயாட் சிகழகம் விடுதலை (சுதந்திரம்) என்ற செய்தித்தாளையும் ஆரம்பித்திருந்தது.லியோன் யூரிஸ் எழுதிய புகழ்பெற்ற நாவலான ‘எக்ஸோடஸை’ நவரத்தினம் தானே மொழிபெயர்த்து தொடர்ச்சியாக வெளியிட்டிருந்தார்.

அதற்கு ‘நமக்கென்றொரு நாடு’ (எங்கள் சொந்த நாடு) என்று பெயரிடப்பட்டது. இளம் பிரபாகரன் அதை ஆவலுடன் உள்வாங்கி கொண்டதுடன் , தமிழர்களுக்கான ஒரு நாட்டின் கனவில் இணைந்துவிட்டார் .

1970 தேர்தலில் தமிழ் சுயராஜ்யக் கட்சி தோற்கடிக்கப்பட்டது. நவரத்னம் உட்பட எந்த வேட்பாளரும் வெற்றி பெறவில்லை. ஆனால் பிரசாரத்தில் விதைக்கப்பட்ட சுயராஜ்யத்தின் விதைகள் “தம்பி” பிரபாகரனின் இதயத்திலும் மனதிலும் உறுதியாக வேரூன்றின.

புலிகளின் தோற்றம்

பிரபாகரன் வேறு சிலருடன் இணைந்து 1972 இல் தமிழ் புதிய புலிகளை உருவாக்கினார். தமிழ் புதிய புலிகள் தங்களை டி.என்.டி என்று அழைத்தனர். டி.என்.டி என்ற சுருக்கெழுத்து “டிரினிட்ரோடோலூயீன்” என்ற வெடிபொருள் கலவைக்கும் பொருந்தும்.

1975 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முன்னாள் யாழ்ப்பாண எம்.பி.யும் மேயருமான அல்பிரட் துரையப்பா பொன்னாலை வரதராஜபெருமாள் (விஷ்ணு) கோவிலில் வழிபட சென்றிருந்தபோது படுகொலை செய்யப்பட்டதன் மூலம் டி.என்.டி தனது அடையாளத்தை வெளிப்படுத்தியது.

பிரபாகரன் உட்பட நான்கு இளைஞர்கள் இந்த கொலையில் ஈடுபட்டனர். இந்த கொலை அவரது “முதல் இராணுவ நடவடிக்கை” என்று பின்னர் பிரபாகரன் பதிவு செய்தார்.

டி.என்.டி 5 மே 1976 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளாகஉருமாறியது. தமிழ் ஐக்கிய முன்னணி (டி.யு.எப்) அதன் புகழ்பெற்ற வட்டுக்கோட்டை மாநாட்டை ஒன்பது நாட்களுக்குப் பிறகு 14 மே1 976 அன்று நடத்தியது.

அப்போதுதான் தமிழர் ஐக்கிய முன்னணி தமிழர் விடுதலை கூட்டணியாக மாறியதுடன் தமிழீழ கோரிக்கையையும் முறையாக ஏற்றுக்கொண்டது.

பிரபாகரன் 8ஆம் வகுப்பில் இருந்தபோது, அவரது பாடப்புத்தகங்களில் ‘திருமாவளவன்’பற்றி படித்திருந்தார் .

சோழப் பேரரசர் கரிகாலன், திருமாவளவன் என்று அழைக்கப்படுபவர்.அவரின் ஆட்சியில் “புலிக்கொடி” “இமயம் முதல் குமரி வரை ” (இமயமலை முதல் குமரிமுனை வரை) பறந்ததாகக் பெருமையுடன்கூறப்படுகிறது.

இதனால் பிரபாகரன் கரிகாலன் மற்றும் புலி கொடியால் ஈர்க்கப்பட்டார். தமிழில் “புலி” என்பது புலியைக் குறிக்கிறது, ஆனால் சோழக் கொடியில் புலி “வேங்கை” அல்லது சிறுத்தை இருந்துள்ளது. விடுதலை புலிகளின் கொடியில் வங்காள புலி பொறி ககப்பட்டிருந்தமை மிகவும் வேறுபட்டதொன்றாகும் .மணி மற்றும் மணியம் என்று அழைக்கப்படும் பிரபாகரன் விரைவில் கரிகாலன் என்ற புனை பெயரை எடுத்துக் கொண்டார்.

சோழ சக்கரவர்த்திக்கு கரிகாலன் என்ற பெயர் அவர் தீயில் சிக்கி கால்கள் எரிந்திருந்ததால் வந்திருந்தது. கரிகாலன் என்றால் “இருண்ட அல்லது கறுப்பு கால்கள்” உடையவர் என்று பொருள். தனது இளமை பருவத்தில் வெடிபொருட்களை பரிசோதிக்கும் போது பிரபாகரனுக்கும் இதே போன்ற அனுபவம் ஏற்பட்டது.

அங்கு ஒரு வெடிப்பு ஏற்பட்டது மற்றும் அவரது கால்கள் எரிந்துவிட்டது . தோல் பல ஆண்டுகளாக கறுப்பாக இருந்தது.

இதனால் “கரிகாலன்” என்ற பெயர் அவருக்குப் பொருத்தமாக அமைந்தது. பின்னர் பிரபாகரனின் வயர்லெஸ் குறியீட்டு பெயர் எச்.ஏ அல்லது ஹோட்டல் அல்பா. இது கரிகாலனில் இருந்து பெறப்பட்டது. அங்கு கரி ஹரியாகவும் பின்னர் எச்.ஏ.யாகவும் மாறியிருந்தது.

1976 இல் விடுதலை புலிகள் உருவாக்கப்பட்டபோது, பிரபாகரன் அதன் இராணுவத் தளபதி மட்டுமே. விடுதலைப் புலிகளின் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட மத்திய குழுவின் தலைவர் உமாமகேஸ்வரன் ஆவார்.

பிரபாவும் மத்தியகுழு உறுப்பினராக இருந்தார். 1980 ல் விடுதலைப்புலிகள் அமைப்பு உடைந்தது.உமாமகேஸ்வரன் புளோட்டை உருவாக்கினார்.

பிரபாகரனின் கீழ் உள்ள விடுதலைப் புலிகள் தங்கத்துரை மற்றும் குட்டிமணி தலைமையிலான டெலோவுடன் பணிபுரியும் உறவைக் கொண்டிருந்தனர். 1981 ஆம் ஆண்டில் பிரபாகரனின் முழுமையான தலைமையின் கீழ் விடுதலைப்புலிகள் மீண்டும் குழுவாக அமைந்தது.

திருமணம் மற்றும் குழந்தைகள்

“மன்மதன்” 1983-’84 இல் தனது ‘மலர்’ அம்புகளால் பிரபாகரனின் இதயத்தைத் துளைத்தார். 1983 இல் ‘கறுப்பு ஜூலை’ க்குப் பிறகு இடம்பெயர்ந்த சில பல்கலைக்கழக மாணவர்கள் 1983 செப்டம்பரில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் உண்ணா விரதத்தில் ஈடுபட்டனர் .

சில பெண் பிள்ளைகளின் நிலை மோசமடைந்தபோது, விடுதலைப் புலிகள் உண்ணாவிரதம் இருந்தவர்களைக் கடத்திச் சென்றனர். அவர்கள் தமிழகத்திற்கு கொண்டு செல்லபட்டனர்.

ஒரு கட்டத்தில் கடத்தப்பட்ட பெண்பிள்ளைகளில் நான்கு பேர் அன்டன் மற்றும் அடே ல் பாலசிங்கம் ஆகியோரின் இல்லத்தில் தங்கி அவர்களுடன் இந்திராநகரில் உள்ள விடுதலைப் புலிகளின் அலுவலகத்திற்குச் செல்வது வழக்கம்.

அவர்கள் அனைவரையும் விட மிக அழகானவர் மதிவதனி ஏரம்பு . அவரது தந்தை ஏரம்பு யாழ்ப்பாணத்தில் புங்குடுதீவை சேர்ந்த பாடசாலை ஆசிரியராக இருந்தார்.

இந்திய பண்டிகைகளில் ஒன்றான கோலி பண்டிகையின் போது வல்வெட்டித்துறை இளைஞனுக்கும் புங்குடுதீவு பெண்ணுக்கும் இடையில் புதிய உறவு மலர்ந்தது .

பிரபாகரன் பாலசிங்கம் இல்லத்திற்கு அடிக்கடி செல்லத் தொடங்கினார். அவர் மதிக்கு பூக்கள் மற்றும் இனிப்புகளைக் கொண்டு வந்தார்.

பிரபாகரன் ஒரு கூச்ச சுபாவமுள்ளவ ராக இருந்தவர். இதற்கு முன்பு தனது குடும்பத்திற்கு வெளியே இருந்த பெண்களுடன் ஒருபோதும் பழகியிருக்கவில்லை. இது ஒரு புதிய அனுபவம். அன்டன் பாலசிங்கம் காதலை ஊக்குவித்தார். அவர்கள் 1984 இல் திருமணம் செய்து கொண்டனர்.

மதிவதனி-பிரபாகரனுக்கு மூன்று குழந்தைகள் இருந்தன. மூத்தவர் சார்ள்ஸ் அன்டனி 1985 இல் பிறந்தார். அவருக்கு பிரபாவின் சிறந்த நண்பரும் இராணுவத் தளபதியுமான சார்ள்ஸ் அன்டனி அல்லது சீலனின் பெயரிடப்பட்டது.

சார்ள்ஸ் அன்டனி சாவகச்சேரி மீசாலையில் பிறந்திருந்தார். அடுத்தவர் 1986 ஆம் ஆண்டில் பிறந்த மகள் துவாரகா.

அவருக்கு பிடித்த மெய்க்காப்பாளர் மயூரனின் பெயர் இடப்பட்டது.மயூரனின் உண்மையான பெயர் துவாரகன்.

மூன்றாவது 1997 இல் பிறந்த ஒரு மகனாவார். மதிவதனியின் சொந்த சகோதரரின் பெயர் அவருக்கு பாலச்சந்திரன் என்று சூட்டப்பட்டது.

அவர் மதிவதனியின் சகோதரர். விடுதலைப்புலிகள் அமைப்பில் சேர்ந்து போரில் இறந்தார். மே 2009 இல் நடந்த போரின் இறுதிக் கட்டத்தில் பிரபாகரனும் அவரது குடும்ப உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர்.

அவரை பின்பற்றுவோரால்” சூரிய தேவன் ”சூரியக்கடவுள் என்ற அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டிருந்தவரும் சிலசமயம் உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த கெரில்லா அமைப்பொன்றை தனது கட்டுப்பா ட்டின் கீழ் வைத்திருந்தவருமான பிரபாகரனின் மரணத்தால் அதிகாரத்தின் நிலையற்றதன்மை தெளிவாக விளக்கப்பட்டுள்ளது .

பல ஆண்டுகளாக அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தபோதிலும் விருப்பமின்மை அல்லது நெகிழ்வுத்தன்மையின்மை காரணமாக பிரபாகரன் தனது இயக்கம், குடும்பம் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக அவரது வாழ்க்கையை இழந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிஉயர் தலைவரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 54வயது உடல் மே 19 செவ்வாய்க்கிழமை ‘நந்திகடல்’ என அழைக்கப்படும் முல்லைத்தீவு கடல்நீரே ரி க்கு அருகே கண்டெடுக்கப்பட்டது.

இக்கட்டுரையை டி .பி.எஸ் .ஜெயராஜ் பைனான்சியல் டைம்ஸ் இல் எழுதியுள்ளார்

-டி.பி.எஸ்.ஜெயராஜ்

Share.
Leave A Reply