இலங்கையில் விடுதலைப்போராட்டம் தொடங்க மூல காரணம் தமிழர்கள் மீதான அரச பயங்கரவாதமே எனத் தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ் மக்களின் இன விடுதலைக்காகவே இயக்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன அவை பயங்கரவாதப் போராட்டம் அல்ல, உரிமைகளுக்கான போராட்டம் தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் 11 ஆவது போர் வெற்றிவிழாவில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆற்றிய உரை தொடர்பில் ஊடங்களுக்குக் கருத்துக்களை பகிரும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் போராட்டம் தொடங்குவதற்கு மூல காரணம் அன்றைய அரசுகளின் அரச பயங்கரவாத செயற்பாடுகளே.
1957 ஆம் ஆண்டிலிருந்து தமிழ் மக்களை சிங்கள கூலிப்படைகள் கொடூரமாகத் தாக்கி சித்திரவதை செய்து வடக்கு கிழக்கிற்கு விரட்டியடித்தனர் சிங்கள பேரினவாதிகளின் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு எதிராக தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியாக போராடினார்கள் அவ்வாறு ஜனநாயக ரீதியாக போராடிய பலர் படுகொலை செய்யப்பட்டனர்.
ஜனநாயக ரீதியில் போராடியவர்கள் தீயிட்டு எரிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு வீதிகளில் எறியப்பட்டனர். இவ்வாறான நிலையிலேயே அரச பயங்கரவாதத்திற்கு எதிராக தமிழ் மக்களை பாதுகாப்பதற்கு விடுதலைப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த விடுதலைப் போராட்டத்தில் பல இயக்கங்கள் உருவாகின உருவாகிய அனைத்து இயக்கங்களும் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராகவே தோற்றம் பெற்றன.
இதேபோலத்தான் தமிழீழ விடுதலைப்புலிகளும் தமிழ் மக்களும் இன விடுதலைக்காக போராடினார்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் உலக நாடுகளின் உதவியுடன் முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டது.
இவ்வாறு தமிழ் மக்களின் இன விடுதலைக்காக நடைபெற்ற போராட்டம் பயங்கரவாதப் போராட்டம் அல்ல தென்னாபிரிக்காவின் அந்தநாட்டு மக்களுக்காக போராடிய நெல்சன் மன்டேலா 25 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டார் அத்துடன் அவரைப் பயங்கரவாதிகள் என்றும் கூறினார்கள் .
பின்னர் போராட்டம் வெற்றி பெற்ற பின்னர் அந்த நாட்டு மக்களால் உலக மக்களால் நெல்சன் மன்டேலா விடுதலைக்காக போராடியவர் என்றும் கூறி வருகின்றனர்.
இது மட்டுமல்லாது இந்தியாவில் சுதந்திரத்திற்காக போராடி மகாத்மா காந்தியைக்கூட வெள்ளையர்கள் பயங்கரவாதி எனக்கூறி சிறையில் அடைத்தனர்.
பின்னர் விடுதலைப்போராட்டத்தில் வென்றதும் உலகமே அவரைப் போற்றி வருகின்றது இதேபோலத்தான் விடுதலைப்போராட்டக் காரர்களும் அடக்குமுறையாளர்கள் எப்போதும் பயங்கரவாதிகளாகவே கணிப்பார்கள் பௌத்த மேலாதிக்கத்தைத் திணிக்கவேண்டும் என்பதை உச்சத்தில் கொண்டிருக்கும் கோத்தாபய அரசு இவ்வாறான கருத்துக்களை கூறிவருகின்றது.
இதனை தமிழ் மக்கள் ஏற்கப்போவதில்லை தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் எமது இனத்திற்கான விடுதலைப் போராட்டத்தின் வடிவங்கள் மாறலாம் இனத்திற்கான உரிமைகளைப் பெறும்வரை எமது போராட்டம் தொடரும் என்றார்.