விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு மே மாதம் என்பது ஆரம்பமாகவும், முடிவாகவும் அமைந்திருந்தமை பலரும் அறியாத ஒரு விடயமாகும்.

விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் போராட்டம் நிறைவுப் பெற்ற தருணம் வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தில் மே மாதம் பல்வேறு வகையில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு 1976ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டதாக பதிவுகளின் ஊடாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் தனிச் சிங்கள சட்டம் உள்ளிட்ட தமிழர்கள் மீதான அடங்கு முறைக்கு எதிராகவே குரல் கொடுக்கும் நோக்குடன் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

1976ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட போதிலும், அதற்கு முன்பிருந்தே சிறு அளவிலான பல்வேறு தாக்குதல்களை வேலுப்பிள்ளை பிரபாகரன் நடத்தியுள்ளதை அறிய முடிகின்றது.

குறிப்பாக விடுதலைப் புலிகள் அமைப்பு உருவாக்கப்படுவதற்கு முன்னரே யாழ்ப்பாணம் நகர முதல்வர் அல்பிரட் துரையப்பாவை சுட்டுக் கொலை செய்ததன் ஊடாக அரசியல் கொலையை புலிகள் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இதையடுத்தே, 1976ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

ராஜீவ் காந்தி படுகொலை

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.

தமிழகத்தின் ஸ்ரீபெரும்புத்தூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த தருணத்திலேயே இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இலங்கையில் 1987ஆம் ஆண்டு இந்திய – இலங்கை உடன்படிக்கையை கைச்சாத்திட்டமை மற்றும் இந்திய அமைதி படையை அனுப்பி மோதல்களை நடத்தியமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தியதாக கூறப்பட்டது.

சர்வதேச நாட்டுத் தலைவர் ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகளினால் கொலை செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்திருந்தது.

ரணசிங்க பிரேமதாஸ கொலை

இலங்கையின் மூன்றாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான ரணசிங்க பிரேமதாஸ, 1993ஆம் ஆண்டு மே மாதம் 01ஆம் தேதி தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.

 விடுதலைப் புலிகளால் பயன்படுத்த ஆயுத வாகனம்

கொழும்பு – ஆமர் வீதியில் நடத்தப்பட்ட மே தின ஊர்வலத்தில் கலந்து கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்தியதாக கூறப்பட்டது.

இலங்கையின் ஜனாதிபதியொருவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த முதலாவது சந்தர்ப்பமாக இது வரலாற்றில் பதிவானது.

முள்ளிவாய்க்கால் இறுதி தருணம்

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி விடுதலைப் போராட்டம் லட்சக்கணக்கான உயிர்களை காவுக் கொண்டு மௌனிக்கப்பட்டது.

சுமார் 3 தசாப்தங்களுக்கும் அதிகமான காலம் சர்வதேச நாடுகளை நிலைகுலைய வைத்த தமிழீழ விடுதலைப் புலிகள், இதே போன்றதொரு மே மாதமே மௌனமானார்கள்.

தமிழர்களின் உரிமை குரலாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், இறுதியில் பல லட்ச தமிழர்களின் உயிர்களை காவுக் கொண்டே நிறைவடைந்ததாக கூறப்படுகின்றது.

பல இழப்புக்களுடன் தீர்வின்றி போராட்டம் மௌனிக்கப்பட்ட மாதமும் மே மாதமாக பதிவாகியுள்ளது.

2009ஆம் ஆண்டு மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஒரு தீர்மானமிக்க தருணமாக அமைந்திருந்தது.

இவ்வாறாக மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பத்திற்கும், மௌனமாவதற்கும் காரணமாக அமைந்த மாதம் என்பதே வரலாற்றில் பதிவாகியுள்ள விடயமாகும்.

 

Share.
Leave A Reply