போரில் கொல்லப்பட்ட தமது உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்துவதற்கு ‘கோவிட் 19’ ஐ காரணம் காட்டி அனைத்து வகையான தடைகளையும் அரசாங்கம் போட்டது.
இந்தத் தடைகளுக்கு மத்தியிலும் தமிழ் மக்கள் தமது உறவுகளை நினைவுகூர்ந்தார்கள். இது நேற்று முன்தினம் நடந்தது.
போரின் வெற்றியை அரசாங்கம் வழமை போல இராணுவ அணிவகுப்புக்களுடன் பிரமாண்டமாகக் கொண்டாடியது.
இதற்காக முப்படைகளும் களமிறக்கப்பட்டிருந்தன. இது நேற்று நடந்தது. இதில் சமூக இடைவெளி பேணப்பட்டதா என்ற கேள்விக்குத் தொலைக்காட்சிச் செய்திகளைப் பார்த்தவர்களுக்குப் பதில் தெரிந்திருக்கும்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வழமைபோல சிங்களக் கடும்போக்களாளர்களை திருப்திப்படுத்துவதைத்தான் இலக்காகக் கொண்டிருந்தார்.
“நாட்டுக்காக பெரும் அர்ப்பணிப்புகளைச் செய்த படையினர் தேவையற்ற அழுத்தத்துக்கு உள்ளாக நான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.
அதேவேளை, எமது நாட்டுக்கு அநீதியான வகையில் ஏதே னும் ஒரு சர்வதேச நிறுவனம் அல்லது சர்வதேச அமைப்பு தொடர்ந்தும் செயற்படுமாக இருந்தால் அந்த நிறுவனத்தின் அல்லது அமைப்பின் உறுப்புரிமையிலிருந்து இலங்கையை விலக்கிக்கொள்ள நான் ஒரு போதும் பின்நிற்கப் போவதில்லை” என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டார். இது சிங்களக் கடும்போக்காளர்களால் பெரிதும் வரவேற்கப்படும் ஒரு அறிவிப்பு.
போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானத்துக்குப் புறம்பான செயற்பாடுகளுக்குப் பொறுப்புக் கூறப்பட வேண்டும் என ஜ.நா. மனித உரிமைகள் பேரவை உட்பட, சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்துவரும் நிலையில், ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு முக்கியமானது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையைத்தான் ஜனாதிபதி குறிப்பாக குற்றஞ்சாட்டியிருக்கின்றார் என்பதும் வெளிப்படையாகத் தெரிகின்றது. இங்குதான் இலங்கை குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சர்வதேச மனிதபிமானச் சட்டங்களை ஏற்றுக்கொண்ட ஒரு நாடு, அவ்வாறான அமைப்பொன்றிலிருந்து இவ்விதம் விலகிக்கொள்வதன் விளைவுகள் எவ்வறானதாக இருக்கும் என்பது ஜனாதிபதிக்குத் தெரியாததல்ல.
வரப்போகும் தேர்தலை இலக்குவைத்த ஒரு உரையாக இது இருக்கலாம். இராணுவ வாதத்தையும், இனவாதத்தையும் தமது அடிப்படையாகக் கொண்டுள்ள ஜனாதிபதி இவ்வாறான ஒரு அறிவித்தலைத்தான் வெளியிடுவார் என்பது எதிர்பார்க்கக்கூடிய ஒன்றுதான். அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
ஜனாதிபதித் தேர்தலுக்கான தமது பிரசாரத்தை ஆரம்பித்த போதே இவ்வாறான ஒரு அறிவித்தலைத்தான் அவர் வெளியிட்டிருந்தார்.
அதாவது, இராணுவத்தினரைப் பாதுகாப்பது என்பதுதான் அவரது நிகழ்ச்சி நிரலில் முதன்மையானதாக இருந்தது. அதனால்தான் கடந்தமாதம் கோரோனா பீதிக்குள் நாடு மூழ்கியிருந்த வேளையில், மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இராணுவச் சிப்பாய் ஒருவரை மன்னிப்புக் கொடுத்து அவர் விடுதலை செய்திருந்தரார்.
சிறுவன் ஒருவன் உட்பட எட்டு அப்பாபிப் பொதுமக்களின் படுகொலைகளுக்குக் காரணமாக இருந்த குறிப்பிட்ட இராணுவச் சிப்பாயின் விடுதலை சர்வதேச ரீதியாக கடும் கண்டனத்துக்குள்ளாகியிருந்தது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கூட அதனை இப்போது கடுமையாக விமர்சித்திக்கின்றார்.
சர்வதேசத்தின் சரிசனை எவ்வாறானதாக இருந்தாலும், தன்னுடைய அணுகுமுறையை மாற்றிக்கொள்ள ஜனாதிபதி தயாராகவில்லை.
இராணுவத்தைப் பாதுகாப்பது என்ற நிலைப்பாட்டில் தான் உறுதியாக இருப்பதை ஜனாதிபதி தனது நேற்றைய உரையில் மீண்டும் வலியுறுத்தியிருக்கின்றார்.
“உலகின் பலம்வாய்ந்த நாடுகளின் தலைவர்கள் கூட தமது நாட்டின் படையினருக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதற்கு அனுமதிக்கப்போவதில்லை எனத் தெரிவித்திருக்கின்ற சூழ்நிலையில், எம்மைப் போன்ற ஒரு சிறிய நாட்டில் இத்தகைய அர்ப்பணிப்புகளைச் செய்துள்ள படையினரைப் பாதுகாப்பதற்கு நான் அர்ப்பணிப்புடன் உள்ளேன்” என்ற அவரது அறிவிப்பு தெளிவான சில செய்திகளைச் சொல்லியிருக்கின்றது. அதாவது, சர்வதேச அமைப்புக்கள் எதிர்பார்ப்பதைப் போல பொறுப்புக் கூறல் நடைபெறப்போவதில்லை என்பதுதான் அந்தச் செய்தி!
அதேவேளையில், இராணுவ வெற்றி நிகழ்வில் சிறுபான்மையின மக்களுக்கு நம்பிக்கையூட்டக்கூடிய கருத்துக்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. இதிலுள்ள செய்தியையும் தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு, அரசியல் தீர்வு என தமது வழமையான கோரிக்கைகளுடன் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை அடுத்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைச் சந்திப்பதற்காகக் காத்திருக்கின்றது.
அங்குதான் தீர்வு கிடைக்கும் என அவர்கள் நம்புகின்றார்கள். கூட்டமைப்பை ஜனாதிபதி சந்திப்பாரா என்பது முதலாவது கேள்வி.
சந்தித்தாலும் அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை அவர் ஏற்றுக்கொள்வாரா என்பது இரண்டாவது கேள்வி. இந்தக் கேள்விகளுக்கான பதில் அனைவருக்குத் நன்கு தெரியும்.
ஜனாதிபதியும் அரசாங்கமும் தமது நிலைப்பாட்டில் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கின்றன. கூட்டமைப்புத் தலைமையிடம் அரசாங்கத்தைக் கையாள்வதற்கான தெளிவான உபாயங்கள் ஏதாவது இருக்கின்றதா? நல்லாட்சிக்கு ஐந்து வருடங்களாக ஆதரவளித்ததைப் போன்ற ஒரு நிலைமைக்குத்தான் கூட்டமைப்பு மீண்டும் செல்லப்போகின்றதா? கூட்டமைப்பிடம் தந்திரோபாயங்களைவிட, தடுமாற்றங்கள்தான் அதிகமாக வெளிப்படுகின்றது!