யாழ்.காங்சேன்துறை வீதி உப்புமடத்தடிப் பகுதியில் உயர் அழுத்த மின்சாரம் தாக்கியதில் உடல் முழுவதும் எரிந்த நிலையில் ஒருவர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை நடந்த குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
சிறிலங்கா ரெலிக்கொம்மின் பகுதியளவாக நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளும் சீரா நிறுவனத்தினர் வீதியோரமாக கம்பங்களை நாட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.
இதன்படி இன்று காலை காங்கேசன்துறை வீதி உப்புமடத்தடியில் வீதியோரமாக கம்பத்தினை நடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கம்பம் நடுவதற்கான குழி தேண்டப்பட்ட நிலையில் பாரம் தூக்கும் இயந்திரம் (கிரேன்) ஊடாக கம்பத்தினை நாட்டுவதற்கு முற்பட்டுள்ளனர்.
இதன் போது அங்கிருந்த உயர் மின்சாரம் கடத்தப்படும் கம்பியில் கம்பம் தொடுகையுற்றதால் பாரம்தூக்கும் இயந்திரத்திற்கு மின் கடத்தப்பட்டுள்ளது.
இதனால் பாரம்தூக்கும் இயந்திரத்தை இயக்கியவரை மின்சாரம் தாக்கியுள்ளது. உடல் முழுவதும் எரிந்த நிலையில் தூக்கி வீசப்பட்ட அவர் அங்கிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த கம்பம் நாட்டும் பணிகள் உரிய முறையில் மின்சார சபைக்கு அறிவிக்காமல் மேற்கொள்ப்பட்டதாலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மின்சார சபையினர் தெரிவித்துள்ளனர்.