சிங்கப்பூரில் ஒன்பது ஆண்டுகள் நீடித்த பழைய வழக்கு ஒன்றில் குற்றவாளிக்கு வீடியோ கால் மூலம் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. உலகம் முழுக்க கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொடும் நிலையில், சிங்கப்பூர் நீதித்துறை வீடியோ கால் மூலம் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கி வருகிறது.

சிங்கப்பூரில் போதை பொருள் கடத்துவோருக்கு மரண தண்டனை விதிக்கும் வழக்கம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்நிலையில், 2011 ஆம் ஆண்டு போதை பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட புனிதன் கெனேசன் என்பவருக்கு மரண தண்டனை வழங்கப்படுவதாக சிங்கப்பூர் நீதிபதி ஜூம் வீடியோ கால் மூலம் தீர்ப்பு வழங்கினார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் அதிகமாக சிங்கப்பூரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அந்நாட்டு நீதித்துறை வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்குகளை விசாரணை செய்து வருகிறது. அதன்படி பெரும்பாலான வழக்குகள் ஒத்திவைக்கப்படுகின்றன.

அந்த வரிசையில், முதல் குற்ற வழக்கு ஒன்றில் வீடியோ கால் மூலம் மரண தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை என சிங்கப்பூர் உச்சநீதிமன்றத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார்.

Share.
Leave A Reply