நாடு வழமைக்கு திரும்பிவருவதால் எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையங்களை திறப்பதற்கு கொவிட்19 பரவலை தடுப்பதற்கான செயற்பாட்டு மையம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
ஏப்ரல் 30 ஆம் திகதியிலிருந்து இன்று (26) வரை எந்தவொரு கொரோன தொற்றாளரும் சமூகத்திலிருந்து இனங்காணப்படாமையானது நாட்டுக்கு கிடைத்த வெற்றி என அக்குழுவினர் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலா கைத்தொழிலை மீள எழுச்சிபெற செய்வதற்காக எடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் மற்றும் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கொவிட்19 பரவலை தடுப்பதற்கான செயற்பாட்டு மையம் கூடியது.
அதன்போது, சுற்றுலா பயணிகளுக்காக நாட்டை திறப்பதனை சர்வதேச மற்றும் உள்நாட்டு சுகாதார அறிவுறுத்தலுக்கமைய மேற்கொள்வதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
முன்கூட்டியே திட்டமிட்டதன் ஊடாக ஏனைய நாடுகளை விடவும் முன்னணியில் இருக்க முடிந்துள்ளது. முதன்மையை இனங்கண்டு சுற்றுலா மற்றும் சுகாதார துறையின் உயர்மட்டத்தினரின் ஆலோசனைகளை வினவி எதிர்கால நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
அதன்படி முதல் கட்டத்தின் கீழ் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஹோட்டல்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளை உள்ளக பயன்பாட்டுக்காக (ஐn hழரளந னுiniபெ) திறக்க தீர்மானிக்கப்பட்டது.
அதன் முன்னேற்றத்துக்கமைய, பதிவு செய்யப்படாத நிறுவனங்களுக்காக இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் பொது சுகாதார பரிசோதகர்களின் கண்காணிப்பில் உணவகங்களை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னி ஆரச்சி, சுற்றுலா கைத்தொழில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஜனாதிபதி செயலாளர் பீ.பி. ஜயசுந்தர ஆகியோருடன் கொவிட்19 பரவலை தடுப்பதற்கான செயற்பாட்டு மையத்தின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.