தமிழ்நாட்டில் இன்று புதிதாக 827 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,372ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, தமிழ்நாட்டிற்குள் 710பேருக்கும், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 117 பேருக்கும் இந்நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றை சோதனை செய்ய 70 சோதனைச் சாலைகள் இயங்கிவரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 12,246 பேருக்கு இந்த சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை மாநிலத்தில் 4,55, 216பேருக்கு இந்த சோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் 639 பேர் மருத்துவமனையிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
ஆகவே, தமிழ்நாட்டில் முழுமையாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 10,548 ஆக உயர்ந்துள்ளது. இந்நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 55 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.
வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர்களில் 1559 பேருக்கு இந்நோய்த் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதில் 936 பேர் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், 27 பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். 17 பேர் தில்லியையும் 19 பேர் மேற்கு வங்கத்தையும் தலா 10 பேர் கேரளா, ராஜஸ்தானையும் சேர்ந்தவர்கள் என மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.
கடந்த 24 மணி நேரத்தில் 12 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 145ஆக உள்ளது. உயிரிழந்த 12 பேரில் 11 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.
ஒருவர் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர். 9 பேர் ஆண்கள் 3 பேர் பெண்கள். இந்த 12 பேரில் ஆறு பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள். 7 பேர் உயர் ரத்த அழுத்தப் பிரச்சனை கொண்டவர்கள்.
உயிரிழந்தவர்களில் 4 பேர் தனியார் மருத்துவமனையிலும் 6 பேர் ராஜீவ்காந்தி அரசு தலைமை மருத்துவமனையிலும் ஒருவர் ஓமந்தூரார் வளாக அரசு மருத்துவமனையிலும் ஒருவர் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.
இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களில் 559 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதுவரை சென்னையில் மட்டும் 12,762 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டில் 45 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 19 பேருக்கும் திருவள்ளூரில் 38 பேருக்கும் திருவண்ணாமலையில் 16 பேருக்கும் இந்நோய்த் தொற்று இன்று கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது கோயம்புத்தூர், நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், திருப்பூர் மாவட்டங்களில் கொரோனா நோயாளிகள் யாரும் இல்லை. ஈரோட்டில் ஒருவர் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார்.