டெல்லியை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது வயலில் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 10 பேரை அவர்களது சொந்த மாநிலமான பிகாருக்கு விமானத்தில் அனுப்பு வைப்பதா்க்கு ஏற்பாடுகளை செய்துள்ளார்.
டெல்லியின் திகிபூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி பப்பான் சிங் காளான் சாகுபடி செய்து வருகிறார். இவரிடம் 10க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா தொற்று பொது முடக்கம் காரணமாக விவசாயப்பணிகள் பாதிக்கப்பட, தன்னிடம் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களை சொந்த ஊர்களுக்கு சொந்த விமானத்தில் அனுப்புவதற்கான ஏற்பாடுகளை பப்பான் சிங் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், வரும் வியாழக்கிழமை காலை 6 மணிக்கு செல்லும் விமானத்தில் தனது பணியாளர்களுக்கு பயணச்சீட்டு முன்பதிவு செய்துள்ளதாகவும், அவர்களை விமான நிலையம் வரை தனது வாகனத்திலேயே சமூக இடைவெளியை கடைபிடித்து அழைத்து செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார்.
“அவர்களது விமான சீட்டிற்கு மொத்தம் 68 ஆயிரம் செலவானது. இதுதவிர அவர்கள் வீட்டிற்குள் செல்லும்வரை பிரச்சனை ஏற்படக்கூடாது என்பதற்காக தலா 3 ஆயிரம் வழங்கியிருக்கிறேன். முன்னதாக அவர்களை புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்புரயிலில் அனுப்பி வைக்க முயற்சித்தேன்.
அது முடியாமல் போனதால், தற்போது அவர்களை விமானத்தில் அனுப்பி வைக்கிறேன். எனது பணியாளர்கள் நடந்து சென்றோ, இதர ஆபத்தான வழிகளிலோ வீடு திரும்புவதை என்னால் ஏற்க இயலாது” என பப்பான் சிங் கூறியதாக செய்தி விவரிக்கிறது.